ADDED : செப் 07, 2024 05:19 AM

சென்னை: நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதை முடிவு செய்து, அரசியலில் பயணிக்க வேண்டும் என, பா.ஜ.,வுக்கு ஆர்.எஸ்.எஸ்., அறிவுறுத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கேரள மாநிலம், பாலக்காட்டில், சமீபத்தில் மூன்று நாட்கள் நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே, பா.ஜ., தலைவர் நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் மற்றும் 32 சங்பரிவார் அமைப்புகளின் தேசிய தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள், 300 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், சங் பரிவார் அமைப்புக்கள், தங்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தன. இயற்கை பேரிடர்கள், ரயில் விபத்து போன்ற பெரும் விபத்துக்கள், குறிப்பாக வயநாடு நிலச்சரிவின்போது, ஆர்.எஸ்.எஸ்., மேற்கொண்ட மீட்பு, நிவாரண பணிகள் குறித்து, கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
இதுபோன்ற பேரிடர்களின்போது, வருங்காலத்தில் எப்படி ஒருங்கிணைத்து செயல்படுவது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடந்துள்ளது.
சங்பரிவார் அமைப்பின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு கொண்டாட்ட திட்டங்கள், நாடெங்கும் குறிப்பாக பா.ஜ., ஆட்சி இல்லாத மாநிலங்களில் நடக்கும் மதமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. லோக்சபா தேர்தலுக்கு பின் நடக்கும், தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் என்பதால், தேர்தலுக்கு முன்பும், பின்பும் பா.ஜ.,வின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட குழப்பங்கள், அதீத நம்பிக்கையால், உ.பி., மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது குறித்து, கூட்டத்தில் பங்கேற்ற பலரும் கவலை தெரிவித்தனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தலில் மட்டுமின்றி, கொள்கை கூட்டாளியாக இருந்த சிவசேனா, காங்கிரஸ் கூட்டணிக்கு சென்றது குறித்து பலரும் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். ஒரே சித்தாந்தத்தில் பயணித்தவர்களை, எதிர் சித்தாந்தம் கொண்டவர்களோடு கூட்டணி அமைத்துக் கொள்ளும் வரையிலான நெருக்கடியை அக்கட்சியினருக்கு கொடுத்திருக்கக் கூடாது என்றும் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
அதே நேரம், காலம் காலமாக கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் அரசியலில் பயணித்துக் கொண்டிருக்கும் தி.மு.க., போன்ற கட்சிகளுடன் திடீர் நெருக்கம் காட்டுவது, கவலைக்குரிய விஷயம் என கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் சொல்லி உள்ளனர்.
இதுபோன்ற நடவடிக்கைகள் பா.ஜ., தொண்டர்களை சோர்வடையச் செய்துவிடும். எனவே, நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்பதை முடிவு செய்துவிட்டு, அரசியல் பயணத்தை தொடர வேண்டும் என, பா.ஜ.,வுக்கு, சங்பரிவார் அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் அறிவுறுத்தினர்.
அதேபோல, பா.ஜ., தலைமையைப் பொறுத்த வரை, இருவர் மட்டுமே பிரதானமாக இருக்கின்றனர். அவர்கள் சொல்வதே வேத வாக்காக எடுத்துக் கொண்டு மொத்த கட்சியினரும் செயல்பட வேண்டும் என்பது போன்ற இக்கட்டான நிலையை ஏற்படுத்தி உள்ளனர். ஒருவேளை அவர்களுடைய கரங்கள் தளர்ந்தால், அடுத்து யாரெல்லாம் முக்கியமாக இருந்து பா.ஜ.,வை வழி நடத்துவர் என்ற குழப்பமான சூழலுக்கு தொண்டர்கள் தள்ளப்படுவர். அது கட்சியின் எதிர்காலத்துக்கே பெரும் பாதிப்பை உண்டு பண்ணும் என்றும் சிலர், பா.ஜ., தலைமை குறித்த தங்களுடைய கவலைகலந்த பார்வையை வெளிப்படுத்தி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.