தில்ஷாத் கார்டனில் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடங்கள் அர்ப்பணிப்பு
தில்ஷாத் கார்டனில் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடங்கள் அர்ப்பணிப்பு
ADDED : ஆக 05, 2024 07:45 PM
தில்ஷாத் கார்டன்:வடக்கு டில்லியின் தில்ஷாத் கார்டனில் உள்ள அரசுப் பள்ளியில் நான்கு மாடிகளைக் கொண்ட புதிய கட்டடங்களை மாநில கல்வி அமைச்சர் ஆதிஷி பல்நோக்குக் கூடத்தை திறந்து வைத்தார்.
அதிநவீன பிளாக்கில் மின்துாக்கி வசதியுடன் கூடிய 24 நவீன வகுப்பறைகள், செயல்பாட்டு அறைகள், ஆய்வகம், நூலகம் ஆகியவை உள்ளன. அத்துடன் 300 பேர் அமரும் பல்நோக்கு கூடமும் திறக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டடங்களை திறந்துவைத்து அமைச்சர் ஆதிஷி பேசியதாவது:
வடகிழக்கு டில்லியின் மக்கள்தொகை அதிகம் உள்ள தில்ஷாத் காலனி, கலந்தர் காலனி, குஷ்ட் காலனி, தாஹிர்பூர் உள்ளி பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு இந்த வளர்ச்சி பயனளிக்கும். நெரிசலான வகுப்பறைகளின் சுமை இல்லாமல், அவர்கள் தரமான கல்வியைப் பெறுவதை இந்த அரசு உறுதிசெய்கிறது.
முன்பு, ஒரே வகுப்பில் 100 மாணவர்களை அடைத்து வைத்து, தற்காலிக கூடாரங்களில் படிக்கும் நிலை இருந்தது. இன்று முதல், இந்த குழந்தைகள் உலகத்தரம் வாய்ந்த வசதிகளில் கல்வி பெறுவர்.
நான் புகழ்பெற்ற தனியார் பள்ளியில் படித்தேன். ஆனால் அங்கு கூட, எனக்கு இதுபோன்ற வசதிகள் இல்லை.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை, அரசுப் பள்ளியில் படித்தால், சிறு சிறு வேலைகளைச் செய்வார் என்று முன்பு மக்கள் நினைத்தார்கள், ஆனால் இன்று, அந்தக் குழந்தை கனவு காணும் வகையில் கெஜ்ரிவால் அரசு தன் பள்ளிகளில் குழந்தைகளுக்கு அருமையான கல்வியை வழங்கி வருகிறது.
அவர்கள் எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் இன்ஜினியர் ஆகும் கனவை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிறைவேற்றுகிறார்.
டில்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற அவரது கனவை இது பிரதிபலிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் கல்விக்காக மாநில பட்ஜெட்டில் தொடர்ந்து 25 சதவீதம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.