ADDED : பிப் 27, 2025 11:17 PM

நாகர்கர்னுால்:தெலுங்கானாவின் நாகர்கர்னுால் மாவட்டத்தின் ஸ்ரீசைலம் அணையில் இருந்து, 4 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்காக ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்டத்தின் கீழ், 44 கி.மீ., நீளத்துக்கு சுரங்கம் அமைக்கப்படுகிறது.
கடந்த 22ம் தேதி, சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இதில், இரண்டு இன்ஜினியர்கள் உட்பட எட்டு பேர் சிக்கிக் கொண்டனர்.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி கடந்த ஆறு நாட்களாக இரவு பகலாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக 30 அடி உயரம் உடைய சுரங்கத்தில், 25 அடி வரை நிரம்பியிருந்த சகதி அகற்றப்பட்டது.
இதையடுத்து, அங்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்ட துளையிடும் இயந்திரம் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை அளவுக்கு பெரிதாக உள்ள அந்த இயந்திரத்தை அங்கிருந்து நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இயந்திரத்தை 'காஸ் வெல்டிங்' செய்யும் கருவி வாயிலாக, துண்டாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இயந்திரம் முழுமையாக வெட்டி எடுக்கப்பட்ட பின்னரே தொழிலாளர்களை மீட்க முடியும்.