உணவு பதப்படுத்தும் தொழில் துவக்கிய 2,000 பயனாளிகளுக்கு தாமதமாகும் மானியம்
உணவு பதப்படுத்தும் தொழில் துவக்கிய 2,000 பயனாளிகளுக்கு தாமதமாகும் மானியம்
ADDED : ஆக 11, 2024 01:22 AM

சென்னை: உணவு பதப்படுத்தும் தொழிலை துவக்கிய 2,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்காமல், சிறு, குறு, நடுத்தர தொழில் துறை தாமதம் செய்கிறது. இதனால், வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் வட்டி செலுத்த முடியாமல், சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மத்திய அரசு, உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதவ, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தை, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயல்படுத்துகிறது.
ரூ.10 லட்சம் மானியம்
இத்திட்டத்தின் கீழ் தனிநபர், மகளிர் குழுக்கள் உணவு பதப்படுத்தும் தொழில் துவங்க, இயந்திரம் மதிப்பில் 35 சதவீதம் அல்லது 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு சிறு கருவி, மூலப்பொருள் வாங்க தலா, 40,000 ரூபாய் சுழல் நிதி வழங்கப்படுகிறது.
வேளாண் உற்பத்தி அமைப்புகள் பொது வசதி ஏற்படுத்த, கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. பயனாளிக்கு வழங்கப்படும் மொத்த மானியத்தில் மத்திய அரசு 60 சதவீதமும், தமிழக அரசு 40 சதவீதமும் வழங்குகின்றன.
கடந்த ஆறு மாதங்களாக, 2,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, 50 கோடி ரூபாய்க்கு மானியம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பலர், மானியம் வழங்கக் கோரி, மாவட்டங்களில் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' முகாமில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து, தொழில் முனைவோர் கூறியதாவது:
மானிய உதவியை எதிர்பார்த்து, வங்கிகளில் கடன் வாங்கி தொழில் துவங்கிஉள்ளோம். மானியத்தில் மத்திய அரசின் பங்கு, தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு விட்டது.
நடவடிக்கை
ஆனால், தமிழக சிறு தொழில் துறை மானியத்தை இன்னும் பயனாளி களுக்கு விடுவிக்காமல் தாமதம் செய்கிறது.
இதனால், வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல், தொழில்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே, மானியத்தை விரைந்து விடுவிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

