நிர்மலாவை மன்னிப்பு கேட்கச் சொல்லி பன் கொடுத்து காங்., நடத்திய ஆர்ப்பாட்டம்
நிர்மலாவை மன்னிப்பு கேட்கச் சொல்லி பன் கொடுத்து காங்., நடத்திய ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 14, 2024 09:08 PM

கோவை:''மத்திய அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவர்,'' என, காங்., மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்தார்.
அன்னபூர்ணா சீனிவாசனை மன்னிப்பு கேட்க வைத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து, கோவை வடக்கு மாவட்ட காங்., கட்சி சார்பில், காந்திபார்க் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:
'கோவில் உண்டியலில் பணம் போடாதீர்கள்' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். அரசுக்கு வருவாய் வருவதை அவர் தடுக்கிறார். தமிழக மக்கள் வரிப் பணத்தை வேறு மாநிலங்களுக்கு வழங்குகின்றனர்.
ராகுல் அமெரிக்காவில் இருந்தாலும், ஹோட்டல் அதிபரை மிரட்டி மன்னிப்பு கேட்ட விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக பிரச்னையை உலகறிய செய்தார். ஆனால், பிரதமர் மோடி, இந்தப் பிரச்னை குறித்து வாயே திறக்கவில்லை. நிர்மலா சீதாராமனுக்கு மக்கள் பிரச்னையும் தெரியாது, மக்கள் அருமையும் புரியாது. ஹோட்டல் அதிபரை மன்னிப்பு கேட்க வைத்ததற்காக, தமிழக மக்களிடம் 24 மணி நேரத்துக்குள் நிர்மலா மன்னிப்பு கோர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பன் மாலை அணிந்து, நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும், ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கட்சியினருக்கு பன் வழங்கப்பட்டது. கட்சியினர் பன் பெற முண்டியடித்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.