ADDED : மே 06, 2024 12:36 AM
சென்னை: 'வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட ஜாதி வெறி கும்பலை கட்டுப்படுத்தாத காவல்துறையினரை கண்டித்து, சேலத்தில் வரும் 8ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சேலம் மாவட்டம், ஓமலுார் அருகேயுள்ள தீவட்டிபட்டி மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்துள்ளது. அதையொட்டி சில சமூகவிரோதிகள், பட்டியலின மக்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தி உள்ளனர்.
கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். கடைகளுக்கு தீ வைத்துள்ளனர். காவல் துறையினர் முன்னிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துஉள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
காவல் துறையினரும், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீதே தாக்குதல் நடத்தி, அதிகார மேலாதிக்க ஆணவப்போக்கை வெளிப்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட பட்டியலின சமூகத்தை சேர்ந்த, 14 பேரை கைது செய்துள்ளனர்.
பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அத்துடன், மாரியம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்கள் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 8ம்தேதி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.