சனாதன தர்மத்தை டெங்கு கொசு என்றவர்கள் எதிர்ப்பால் அமைதியாகி விட்டனர்: கவர்னர் ரவி
சனாதன தர்மத்தை டெங்கு கொசு என்றவர்கள் எதிர்ப்பால் அமைதியாகி விட்டனர்: கவர்னர் ரவி
ADDED : செப் 15, 2024 01:00 AM

சென்னை: ''தமிழர்களின் இதயங்களில் இருந்து, ராமரை யாராலும் அகற்ற முடியாது,'' என கவர்னர் ரவி தெரிவித்தார்.
ஹரி, ஹேமா ஹரி ஆகியோர் இணைந்து எழுதியுள்ள, 'ஸ்ரீராமா இன் தமிழகம்:- பிரிக்க முடியாத பந்தம்' என்ற தமிழ், ஹிந்தி, ஆங்கில நுால் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்தது.
கவர்னர் ரவி நுாலை வெளியிட, மூத்த அரசியல் தலைவர் ஹெச்.வி.ஹண்டே, துக்ளக் வார இதழ் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
இந்திய மக்கள் அனைவரது மனங்களிலும் நிறைந்திருப்பவர் ராமர். நாடு முழுதும் ராமர் கோவில்கள் உள்ளன. ராமர் சம்பந்தப்பட்ட பெயர்களை நாடெங்கும் மக்கள் வைத்துள்ளனர். ராமர் இந்தியாவை இணைக்கும் பாலமாக இருக்கிறார்.
துரதிருஷ்டவசமாக அழகிய ஆன்மிக பூமியான தமிழகத்தில், ராமருக்கு எதிரான பிரசாரங்கள் நடந்தன.
ராமர் கடவுளே இல்லை; ராமருக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு இல்லை; அவர் வட இந்திய கடவுள் என்றெல்லாம் பிரசாரம் நடந்தது.
ஆனால், ராமர் இந்தியாவில் எங்கும் நிறைந்திருக்கிறார். தமிழகத்தில் ராமர் கோவில்கள் உட்பட, ராமரோடு தொடர்புடைய இடங்கள் ஏராளம் உள்ளன. அவற்றை ஸ்ரீராமா இன் தமிழகம் நுால் ஆவணப்படுத்தியுள்ளது. குக்கிராமங்களிலும் ராமர் கோவில்கள் உள்ளன.
ராமர் இல்லாமல் இந்தியா இல்லை. ராமரின் வரலாறு, அவரை பற்றிய செய்திகள், மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும், மனதிற்கு அமைதியையும் அளிக்கின்றன. காந்திக்கு ஊக்கம் தந்தது ராமர் தான். ராமர் பற்றிய பிரார்த்தனை பாடலை தினந்தோறும் பாடியவர் காந்தி.
இந்திய மக்களின் மனங்களில் இருந்து, ராமரை யாராலும் அகற்ற முடியாது. அதில், தமிழகம் மட்டும் விதிவிலக்கல்ல.
காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது வாரணாசிக்கும், தமிழகத்திற்கு இடையே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்த, நெருங்கிய ஆன்மிக, கலாசார தொடர்புகளை அனைவரும் அறிந்து கொண்டோம். தமிழகம் ஆன்மிக பூமி, சனாதனத்தை போற்றும் மண் என்பதற்கு இதெல்லாம் உதாரணம்.
தமிழகத்தில் கலாசார அழிப்பு முயற்சிகள் நடந்தன. சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா கொசுவோடு ஒப்பிட்டு அழிப்போம் என்றவர்கள், மக்களிடம் எதிர்ப்பு எழுந்ததும், இப்போது அமைதியாகி விட்டனர்.
இந்தியாவின் ஆன்மா சனாதன தர்மம். தர்மம் இல்லாமல் இந்தியா இல்லை. சனாதன தர்மம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது; அரவணைக்கிறது.
மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள், தாவரங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் பாதுகாப்பை, சனாதன தர்மம் வலியுறுத்துகிறது. சனாதன தர்மம் இருக்கும் வரை, பாரதம் இருக்கும்; பாரதம் இருக்கும் வரை சனாதன தர்மம் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.