தனியார் மருத்துவமனையில் சிகிச்சை போக்சோ கைதிக்கு அனுமதி மறுப்பு
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை போக்சோ கைதிக்கு அனுமதி மறுப்பு
ADDED : மே 29, 2024 12:35 AM
சென்னை:தண்டனை கைதி, தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு அனுமதி தர, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையான ஸ்டான்லியில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
உளுந்துார்பேட்டையைச் சேர்ந்தவர், 'போக்சோ' வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, கடலுார் மத்திய சிறையில் உள்ளார். இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள, மூன்று மாதங்கள் விடுமுறை வழங்கவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவரது மகன் மகேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, ''சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில், மனுதாரரின் தந்தை சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்,'' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க விரும்பவில்லை.
'ஸ்டான்லி மருத்துவமனை புகழ் பெற்றது என்பதால், மனுதாரர் எந்த பயமும் கொள்ள தேவையில்லை. விரைவில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அறுவை சிகிச்சைக்குப் பின், அவரது தேவையை கவனித்துக் கொள்வதில், மனுதாரருக்கும், தாயாருக்கும், எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கக்கூடாது' என்று கூறிஉள்ளனர்.