அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களின் பதிவு ரத்து: மூர்த்தி
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களின் பதிவு ரத்து: மூர்த்தி
ADDED : ஆக 15, 2024 12:15 AM
சென்னை:தமிழக வணிக வரி துறை ஆய்வு கூட்டம், சென்னை நந்தனத்தில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் மூர்த்தி, துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத், வணிக வரித் துறை ஆணையர் டி.ஜெகந்நாதன், இணை ஆணையர் துர்கா மூர்த்தி பங்கேற்றனர்.
வரி பகுத்தாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றி, அரசுக்கு கூடுதல் வருவாய் ஈட்டி தந்த உதவி ஆணையர் ராம்குமார், மாநில வரி அலுவலர் முகமது இர்பான் ஆகியோருக்கு, தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:
அனைத்து இணை ஆணையர்களும், தங்கள் கோட்டங்களை சார்ந்த பகுதிகளில் அடிக்கடி ஆய்வு செய்து, போலி பில் தயாரித்து வணிகம் செய்யும் நிறுவனங்களை கண்டறிய வேண்டும். மேலும், 40 லட்சம் ரூபாய்க்கு மேல் தொழில் செய்வோர் விபரங்களை கண்டறிந்து, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.
தொடர்ந்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.