ஜவ்வாது மலை பழங்குடியின உறைவிட பள்ளியில் சிக்கன் சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு
ஜவ்வாது மலை பழங்குடியின உறைவிட பள்ளியில் சிக்கன் சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுப்போக்கு
ADDED : ஜூன் 25, 2024 01:38 AM
ஜமுனாமரத்துார்: ஜவ்வாது மலையிலுள்ள பழங்குடியின உறைவிட பள்ளியில், சிக்கன் சாப்பிட்ட மாணவ, மாணவியருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. இதனால், வரும் 27 வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையிலுள்ள அரசவெளி கிராமத்தில், பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு உறைவிட பள்ளி இயங்குகிறது. இங்கு, 100 மாணவ, மாணவியர் மட்டுமே தங்கும் இடவசதி உள்ள நிலையில், பள்ளியில் படிக்கும், 275 பேரும் ஒரே கட்டடத்தில் தங்கி படிக்கின்றனர்.
கடந்த 19ல், 275 மாணவ, மாணவியர் மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக தங்கியுள்ள ஆசிரியர்கள் என, மொத்தம் 281 பேருக்கு, 18 கிலோ சிக்கன் வாங்கி சமைத்து மதிய உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்டவுடன், 10 மாணவ, மாணவியருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
அருகிலுள்ள ஜமுனாமரத்துார், நம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், தொடர்ந்து மற்ற மாணவ, மாணவியருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதனால், 27 வரை பள்ளிக்கு விடுமுறை அளித்து, மாணவ, மாணவியர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.
மாவட்ட சுகாதார துணை இயக்குனர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், மாணவ, மாணவியரின் வீடுகளுக்கே சென்று பரிசோதித்து சிகிச்சை அளிக்கின்றனர்.
மாவட்ட பழங்குடியினர் திட்ட அதிகாரி கலைச்செல்வி விசாரணையில், பள்ளி சமையலறை மற்றும் விடுதி வளாக சுகாதார சீர்கேட்டால் மாணவ, மாணவியர் உடல் நலம் பாதித்தது தெரியவந்தது.