ADDED : ஜூன் 24, 2024 11:50 PM
சென்னை: ''சட்டசபையை பொதுக்கூட்டமாக்கி விடக்கூடாது. பொதுக்கூட்டத்தில் பேசுவது போல, சட்டசபையில் ஒவ்வொருவர் பெயரையும் சொல்லிக் கொண்டிருப்பது சரியல்ல,'' என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று, தி.மு.க., - எம்.எல்.ஏ., கிரி, மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசும்போது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பெயர்களை கூறி நன்றி தெரிவித்தார்.
அவர் பேசி முடித்ததும், அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
நான் அரை நுாற்றாண்டு காலமாக, இந்த சபையில் உழன்று கொண்டிருப்பவன். சபையில் கண்ணியங்கள், கட்டுப்பாடுகள் கொஞ்சும் கொஞ்சமாக மாறி வருவதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.
உறுப்பினர்கள் பேசும் போது, பேச்சை துவக்குவதற்கு முன், சபாநாயகரை மட்டும் தான் விளிக்க வேண்டும். பொதுக்கூட்டத்தில் பேசுவது வேறு; சட்டசபையில் பேசுவது வேறு. ஆனால், சட்டசபையை பொதுக்கூட்டமாக்கி விடக்கூடாது.
தங்கள் தலைவர்கள் என்ன செய்தனர் என்று புகழ்ந்து பேசுவதில் தப்பில்லை.
ஆனால், இங்கே பொதுக்கூட்டத்தில் பேசுவது போல, ஒவ்வொருவர் பெயரை சொல்லிக் கொண்டிருப்பது சரியல்ல. அவர்களுக்கு கொடுக்கப்படும் நேரமே குறைவு.
அந்த நேரத்தில் இதை சொல்லிக் கொண்டிருந்தால், அவர்கள் பேசுவது போய் விடும். கடைசியில் என்ன சொல்ல வேண்டுமோ, அதை சொல்லாமல் போய் விடுவர்.
மேலும், இது நல்ல மரபல்ல. எனவே, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும், தங்கள் தலைவரை புகழலாம்.
சபாநாயகர் கண்டிப்பாக இருந்து, இப்படி பேசுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு யாரேனும் செய்தால், 'உங்கள் நேரம் முடிந்தது' எனக் கூறி உட்கார வையுங்கள்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அதை ஏற்றுக் கொண்ட சபாநாயகர், ''உங்கள் ஆலோசனை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்,'' என்றார்.