பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நடிகருக்கு ஆதரவாக இயக்குனர்கள்
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நடிகருக்கு ஆதரவாக இயக்குனர்கள்
ADDED : செப் 07, 2024 05:54 AM

சென்னை: தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள நிவின்பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு, இயக்குனர்கள் இருவர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
மலையாள திரையுலகின் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பின், மலையாளம் மட்டுமின்றி, தமிழ் திரையுலகிலும் புயலை கிளப்பியுள்ளது. திரையுலக பிரபலங்கள் மீது, அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
சில தினங்களுக்கு முன், நடிகர் நிவின்பாலி உள்ளிட்ட பலர், துபாயில் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்கு உடனடியாக மறுப்புதெரிவித்து, சட்ட ரீதியாக புகாரை சந்திப்பேன் என, நிவின்பாலி கூறியிருந்தார்.
இந்நிலையில் மலையாள இயக்குனர்கள் வினித் சீனிவாசன் மற்றும் அருண் ஆகிய இருவரும் மறுப்பு தெரிவித்து, நிவின்பாலிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர்.
அவர்கள் கூறியுள்ளதாவது:
டிசம்பர் 14 முதல் 15ம் தேதி காலை வரை கொச்சியில் வினித் சீனிவாசன் இயக்கத்தில் நடந்த படத்தின் படப்பிடிப்பில், நிவின் பாலி பங்கேற்றார். பின், கொச்சியில் இயக்குனர் அருண் இயக்கத்தில் நடந்த, 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
மேலும், 40 வயது மதிக்கத்தக்க பெண் தாக்கல் செய்த வழக்கில், 'அந்த தேதியில் துபாயில் நடிகர் ஒரு கும்பலுடன் சேர்ந்து, பாலியல் பலாத்காரம் செய்தார்' என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி, தன் திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தன் மீது பாலியல் குற்றச்சாட்டு வெளியான சில நிமிடங்களில், புகார் கூறிய பெண்ணுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக, நிவின்பாலி தெரிவித்தார்.
முன்னதாக பெண்ணின் புகாரை தொடர்ந்து, கேரளாவில் உள்ள ஊன்னுகல் காவல்துறையினர் நிவின் பாலி மீது, ஐ பி சி 376 பிரிவின் கீழ் புகார் ஒன்றினை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.