தலைமை செயலர் - இயக்குநர் உத்தரவில் முரண்பாடு; கல்வித்துறையில் 'தகதகக்கும்' சர்ச்சை
தலைமை செயலர் - இயக்குநர் உத்தரவில் முரண்பாடு; கல்வித்துறையில் 'தகதகக்கும்' சர்ச்சை
ADDED : மே 11, 2024 05:37 AM

மதுரை : 'கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என்ற தலைமை செயலாளர் உத்தரவு கல்வித்துறையில் அமலில் உள்ள நிலையில், 'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்' என ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்த உத்தரவை பின்பற்றுவது என அதிகாரிகள், ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கோடை விடுமுறை, வெப்ப அலை காரணமாக மாணவர்கள் நலன் கருதி அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது. சிறப்பு வகுப்புகள் நடக்கவில்லை என்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
மதுரை,புதுக் கோட்டை, திருச்சி உள்ளிட்ட சில இடங்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக எழுந்த புகார்கள் அடிப்படையில் தனியார் பள்ளிகள் இயக்குநர் முத்துபழனிசாமி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால் அதற்கு முந்தைய நாளில் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட அதிகாரி ஆர்த்தி அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கும் பிறப்பித்த உத்தரவில் 'தொடர்ந்து கற்போம் என்ற தமிழக அரசின் திட்டத்தின்படி பத்தாம் வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களை அழைத்து திங்கள் முதல் வெள்ளி வரை சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். சனி அன்று தேர்வு நடத்த வேண்டும். இதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார். இதனால் எந்த உத்தரவை பின்பற்றுவது என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை என்று தான் பெயர். ஆனால் ஏதாவது ஒரு திட்டத்தை குறிப்பிட்டு அவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்பது தான் தற்போதைய அதிகாரிகளின் நிலைப்பாடு. ஒரு உத்தரவுக்கு மாறாக மற்றொரு முரணான உத்தரவு வெளியாவது இத்துறையில் வழக்கம் தான்.
ஆனால் தலைமை செயலாளர் உத்தரவு இருக்கும் நிலையில், அதற்கு முரணாக பிறப்பிக்கப்பட்டது என்பது புதிது. 'தொடர்ந்து கற்போம்' திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவிட வேண்டும் என்பதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் தலைமை செயலாளர் உத்தரவால் இயக்குநர் உத்தரவை நடைமுறைப்படுத்த கலெக்டர், கல்வி அதிகாரிகள் தயங்குகின்றனர். கோடை வெப்பத்தால் தாக்குப்பிடிக்க முடியாத நேரத்தில் இதுபோன்ற தேவையில்லாத குழப்பம் தவிர்க்கப்பட வேண்டும் என்றனர்.