மேட்டூர் அணை உபரிநீர் சேலம் மாவட்ட ஏரிகளுக்கு வினியோகம்
மேட்டூர் அணை உபரிநீர் சேலம் மாவட்ட ஏரிகளுக்கு வினியோகம்
ADDED : ஜூலை 31, 2024 08:41 PM
மேட்டூர்:மேட்டூர் அணை உபரிநீர், சேலம் மாவட்ட ஏரிகளுக்கு வினியோகம் செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
மேட்டூர் அணை நிரம்பினால் உபரிநீர் கடலில் கலந்து வீணானது. அந்த நீரில் ஒரு டி.எம்.சி., நீரை, சேலம் மாவட்டம் மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலுார், தாரமங்கலம், இடைப்பாடி பகுதிகளில் உள்ள வறண்ட ஏரிகளில் நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது. அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., 2020 மார்ச், 4ல் இருப்பாளி, மேட்டுப்பட்டி ஏரியில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். அணை இடது கரையில் உள்ள திப்பம்பட்டியில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி முடிந்தது.
கடந்த, 2021 பிப்., 26ல் நீரேற்று நிலையம் மூலம் எடுத்த நீரை, எம்.காளிப்பட்டி ஏரியில் நிரப்பி திட்டத்தை, இ.பி.எஸ்., தொடங்கி வைத்தார். உபரிநீர் திட்டத்தில் நடைமுறை சிக்கல் தீர்க்க, 2023ல் திட்ட மதிப்பீடு, 674 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.
நேற்று முன்தினம் மேட்டூர் அணை நிரம்பியதால் உபரிநீர், திப்பம்பட்டி நீரேற்று நிலைய தொட்டியில் தேங்கியது. அந்த நீரை ஏரிகளுக்கு அனுப்புவதற்கு நேற்று காலை, 6:30 மணிக்கு, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி , இயந்திரங்களை இயக்கினார். இதில் மேட்டூர் சப்-கலெக்டர் பொன்மணி, தி.மு.க.,வின் சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், பா.ம.க.,வின், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், சரபங்கா வடிநீர் கோட்ட செயற்பொறியாளர் ஆனந்தன், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து தண்ணீர் காளிப்பட்டி ஏரியை அடைந்தது. அங்கு சென்ற கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், நீர் வருவதை பார்வையிட்டு மலர் துாவினர். மொத்தம், 79 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் செக்கான், பி.என்.பட்டி, கொத்திக்குட்டை என, 3 ஏரிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 82 ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்லப்படும்.
முதல்கட்டமாக, 56 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து காளிப்பட்டிக்கு, குழாய்களில் வினாடிக்கு, 126 கனஅடி நீர் செல்லும். தவிர, 88 கனஅடி நீர் நங்கவள்ளி ஏரிக்கு அனுப்பி, அங்கிருந்து பிற ஏரிகளுக்கு வினியோகிக்கப்படும். அதிகபட்சம் மேட்டுப்பட்டி ஏரிக்கு செல்லும் நீர் மூலம், 67.89 ஏக்கர், குறைவாக எம்.காளிப்பட்டி ஏரி நீர் மூலம், 3.81 ஏக்கர் நிலம் என, மொத்தம், 4,061 ஏக்கர் பாசன வசதி பெறும்.