மாவட்டம் தோறும் அரசு முதியோர் இல்லம்; உயர் நீதிமன்றம் உத்தரவு
மாவட்டம் தோறும் அரசு முதியோர் இல்லம்; உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 10, 2024 06:14 AM

மதுரை: தமிழக அரசு சார்பில், மாவட்டந்தோறும் ஒரு முதியோர் இல்லம் அமைக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
துாத்துக்குடி அதிசயகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியுள்ளதாவது:
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் விதிகளின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதரவற்ற மூத்த குடிமக்கள், கைவிடப்பட்ட பெற்றோருக்கு முதியோர் இல்லங்களை அமைக்க வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறிஉள்ளார்.
அந்த மனுவை, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. பிறப்பித்த உத்தரவு:
மாவட்டத்திற்கு ஒரு முதியோர் இல்லமாவது அமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு தொண்டு நிறுவனங்கள் நடத்தும் முதியோர் இல்லங்களுக்கு அரசு வழங்கும் மானிய உதவியை தடை செய்யாது.
கட்டுமான பணியை ஆறு மாதங்களில் துவக்காவிடில் வழக்கை மீண்டும் நடத்த, உரிமை கோரி மனுதாரர் இந்நீதிமன்றத்தை நாடலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டது.