தி.மு.க.,-- அ.தி.மு.க., கள்ள கூட்டணியை மக்கள் உடைப்பார்கள்: அண்ணாமலை
தி.மு.க.,-- அ.தி.மு.க., கள்ள கூட்டணியை மக்கள் உடைப்பார்கள்: அண்ணாமலை
ADDED : மார் 28, 2024 02:05 AM

கோவை:''என்னைப் பார்த்து, தி.மு.க., அ.தி.மு.க., இரு கட்சிகளுக்கும் பயம். அவர்களின் கள்ளக்கூட்டணியை மக்கள் உடைப்பார்கள்,'' என, பா.ஜ., கோவை தொகுதி வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை தெரிவித்தார்.
மாவட்ட தேர்தல் அலுவலரிடம் நேற்று, மனு தாக்கல் செய்த பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வானதி சீனிவாசனுக்கு ஒரு சட்டசபை தொகுதியை, பரிசாக அளித்த கோவை மக்கள், லோக்சபா தேர்தலில் ஆறு சட்டசபை தொகுதிகளையும், பிரதமர் மோடிக்கு பரிசாக அளிப்பார்கள். பா.ஜ.,வின் 400 எம்.பி.,க்களில் ஒருவனாக, கோவையின் குரலை லோக்சபாவில் கம்பீரமாக ஒலிப்பேன்.
பா.ஜ., தமிழகத்தில் வெற்றியடையப் போகிறது எனத் தெரிந்ததும், தி.மு.க., அ.தி.மு.க., இரு கட்சியினரும் இணைந்து, எங்களுக்கு எதிராக சண்டை போடுகிறார்கள்.
வளர்ச்சியைத் தடுப்பவர்கள், கோவை வளரக்கூடாது என நினைக்கும் ஆதிக்க சக்திகள், கஞ்சா விற்பவர்கள், அடுத்த தலைமுறையின் வளர்ச்சியைத் தடுப்பவர்களோடுதான், எங்களுடைய சண்டை இருக்கிறது. விமான நிலைய விரிவாக்கம், பருத்தி இறக்குமதி வரி இது குறித்தெல்லாம், இங்குள்ள எம்.பி., நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவே இல்லை. விமான நிலைய விரிவாக்கத்துக்காக, வெறும் 87 ஏக்கர் நிலத்தைக் கொடுக்க, தமிழக அரசு காலதாமதம் செய்வது ஏன்?
எங்கிருந்து வந்து போட்டியிடுகிறோம் என்பது முக்கியமல்ல. கடந்த 10 நாட்களாக இரு கட்சி வேட்பாளர்களும் பயந்து அலறிக் கொண்டுள்ளனர். இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர் என வெளிப்படையாக சொல்கிறேன். அவர்களின் கூட்டணியை மக்கள் உடைப்பார்கள்.
அ.தி.மு.க., வேட் பாளர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., கோட்டாவில் படித்தார் என்று கூறியதற்காக மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. என் கருத்தில் மாற்றமில்லை.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில், முஸ்லிம் சகோதரர்களும்தான் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது.
அடிப்படைவாதிகள், பிற்போக்குவாதிகள் கோவையின் வளர்ச்சியைக் கெடுக்க நினைப்பார்கள். எனவே, 1998 குண்டுவெடிப்பை மறக்க வேண்டிய ஒன்றாகக் கருதக்கூடாது. மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நடந்து விடக்கூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு.
சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வார்த்தைகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. 'கோவை மக்கள்' என்ற வார்த்தையில் நம்பிக்கை உள்ளது.
மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என, கோவை மக்கள் விரும்புகின்றனர். எனவே, நான் குறைந்த பட்சம் 60 சதவீத ஓட்டுகளைப் பெறுவேன்.
பா.ஜ.,வின் நான்கு எம்.எல்.ஏ.,க்களும் அ.தி.மு.க., போட்ட பிச்சையா என்பதற்கு, ஜூன் 4ம் தேதி மக்கள் பதிலளிப்பார்கள். அன்றைய தினம் கோவை மக்களின் குரலை, தமிழகம் கேட்கும்; நாடே கேட்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மாற்று வேட்பாளராக, மாவட்ட தலைவர் ரமேஷ் மனு தாக்கல் செய்தார்.
வளர்ச்சியைத் தடுப்பவர்கள், கோவை வளரக்கூடாது என நினைக்கும் ஆதிக்க சக்திகள், கஞ்சா விற்பவர்கள், அடுத்த தலைமுறையின் வளர்ச்சியைத் தடுப்பவர்களோடுதான், எங்களுடைய சண்டை இருக்கிறது.