தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதிப்பு
தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதிப்பு
ADDED : ஆக 28, 2024 11:40 PM
சென்னை:ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி, வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தும், மனைவி, மகன், மகள் பெயரில் அந்நாட்டு பங்குகளை வாங்கி அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு, 908 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
அரக்கோணம் லோக்சபா தொகுதி தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இன்றி, சிங்கப்பூர் சில்வர் பார்க் நிறுவனத்தின், 70 லட்சம் பங்குகளை, 32.69 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.
வழக்குப்பதிவு
அவற்றில், 45 லட்சம் பங்குகளை தன் மனைவி அனுசுயா; 22.5 லட்சம் பங்குகளை மகள் நிஷா; 2.5 லட்சம் பங்குகளை மகன் சந்தீப் ஆனந்த் பெயருக்கும், 2018 செப்டம்பரில் மாற்றி உள்ளார்.
இதுகுறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜெகத்ரட்சகன், அவரது மனைவி, மகள், மகன் பெயரில் அன்னிய செலாவணி மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது குற்றம் நடந்து இருப்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான, 89.19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, 2020, செப்.,11ல் பறிமுதல் செய்தனர். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகத்ரட்சகன் வழக்கு தொடர்ந்தார்.
அன்னிய செலாவணி தொடர்பாக, மேல்முறையீடு தீர்ப்பாயத்திலும் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, அமலாக்கத்துறை பிறப்பித்த சொத்து பறிமுதல் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே, அமலாக்கத்துறை அதிகாரிகள், 2021, டிச., 1ல், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், சிங்கப்பூரில் ஷெல் கம்பெனி எனும் பெயரளவில் செயல்படும் நிறுவனம் ஒன்றில், ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி, 42 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதை கண்டறிந்தனர்.
நோட்டீஸ்
அதே பாணியில், இலங்கையில் உள்ள நிறுவனத்தில், 9 கோடி ரூபாய் முதலீடு செய்து இருப்பதும் அவர்களுக்கு தெரியவந்தது.
இது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அவர்களின் வழக்கறிஞர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதை, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றமும், சொத்து பறிமுதல் தொடர்பாக, அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என கூறிவிட்டது.
இதையடுத்து, ஏற்கனவே, 89.19 கோடி ரூபாய் பறிமுதல் செய்த உத்தரவை அமலாக்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தும், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு, 908 கோடி ரூபாய் அபராதம் விதித்தும், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டுள்ளனர்.