மத்திய அரசை கண்டித்து தி.மு.க., போராட்டம் அறிவிப்பு
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., போராட்டம் அறிவிப்பு
ADDED : ஜூலை 02, 2024 05:43 AM

சென்னை: மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள, மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும் என, தி.மு.க., அறிவித்து உள்ளது.
தி.மு.க., சட்டத்துறை செயலர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., தலைமையில், மாநில நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடந்தது. அதில், மத்திய அரசால் அமல் செய்யப்படும் மூன்று குற்றவியல் சட்டங்கள், நீதி பரிபாலனம், மாநில சுயாட்சி, மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பவை குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் பின், மூன்று கட்ட போராட்டங்கள் நடத்துவது என, அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் விபரம்:
* வரும் 5ம்தேதி மாவட்ட நீதிமன்றங்கள் முன், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களையும் ஒன்றிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது
* வரும் 6ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது
* குற்றவியல் சட்டங்களின் பாதகங்களை வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அறியும் வகையில், தமிழகம் முழுதும் கண்டன கருத்தரங்குகள் நடத்துவது என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.