குழாயடி சண்டையில் தி.மு.க., - பா.ஜ., அ.தி.மு.க., கிண்டல்
குழாயடி சண்டையில் தி.மு.க., - பா.ஜ., அ.தி.மு.க., கிண்டல்
ADDED : பிப் 22, 2025 05:38 AM

மதுரை : ''கல்வி நிதி விஷயத்தில் தி.மு.க., - பா.ஜ.,வினர் குழாயடி சண்டை போட்டு வருகிறார்கள்,'' என, மதுரையில் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் கூறினார்.
அவர் கூறியதாவது: நான்கு ஆண்டுகள் தி.மு.க., அரசு என்ன செய்தது. ஒரு மருத்துவக் கல்லுாரியை கூட பெற்றுத்தர முடியவில்லை. மத்திய அரசிடம் மாணவர்கள் நிதியை கூட பெற்று தர முடியாத அரசாக தி.மு.க., உள்ளது.
கல்வி நிதி விஷயத்தில் தி.மு.க., - பா.ஜ.,வினர் குழாயடி சண்டை போட்டு வருகிறார்கள். கல்வி நிதியைப் பெற்றுத் தர முடியவில்லை. ஆனால் 'அண்ணா சாலைக்கு வா, இங்கே வா அங்கே வா' என துணை முதல்வர் உதயநிதி அரைவேக்காடு தனமாக தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார்.
தி.மு.க., கூட்டணி கட்சிகளை சேர்ந்த 39 எம்.பி.,க்களால் மாணவர்கள் கல்விநிதியை பெற்றுத்தர முடியவில்லை. அவர்கள் ராஜினாமா செய்ய தயார் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பாரா. பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தாமல் ஸ்டாலின் கண்ணீர் கடிதம் எழுதுவது யாரை ஏமாற்ற. நீட் தேர்வு ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றனர். இப்போது என்ன ஆனது.
அ.தி.மு.க., ஆட்சியில் 8 ஆண்டுகள் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தும் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. சொத்து வரியை உயர்த்தவில்லை. அப்போது எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் நாங்கள் உயர்த்தாத மின் கட்டணத்துக்கு ஆர்ப்பாட்டம் செய்தார். தற்போது தனது ஆட்சியில் 3 முறை மின்கட்டணத்தை உயர்த்தி விட்டார். சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்திவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.