இளைஞர்களை திமுக ஏமாற்ற முடியாது: சொல்கிறார் அண்ணாமலை
இளைஞர்களை திமுக ஏமாற்ற முடியாது: சொல்கிறார் அண்ணாமலை
ADDED : ஏப் 07, 2024 03:29 PM

சென்னை: 'திமுகவின் தேர்தல் வித்தைகளால் இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்களை ஏமாற்ற முடியாது.' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் ஆக இது இருக்கும். என முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் என்பது இந்தாண்டின் சிறந்த நகைச்சுவையாகக் கருதப்பட வேண்டியது; கோவையில் 3 ஆண்டுகளாக திமுகவால் புதிய பஸ் நிலையமே அமைக்க முடியவில்லை.
திமுகவின் தேர்தல் வித்தைகளால் இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்களை ஏமாற்ற முடியாது. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் அளித்த 511 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
எனக்கு ஓட்டு அளியுங்கள்
திருப்பூர் வடுகபாளையம்புதூரில் தேர்தல் பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது: உங்கள் வீட்டு பிள்ளை எனக்கு ஓட்டு அளியுங்கள். பிரதமர் மோடி கொடுக்கக் கூடிய திட்டத்தை இங்குள்ள கும்பல் சுரண்டுகிறது. ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாகவே வைத்திருக்கிறார்கள்.
அவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும். நான் வெற்றிபெற்றால் ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டுவந்தே தீருவேன். நான் தமிழகம் முழுவதும் நடந்து சென்று வந்து விட்டேன். எல்லா பிரச்சனைகளையும் உற்று பார்த்து விட்டேன். ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். நான் மாற்றி காட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

