ADDED : ஏப் 04, 2024 06:32 AM

சென்னை: 'இவிஎம்' எனப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் புதிய டிசைனை எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு.க., வழக்கு தொடர்ந்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை செயலர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் அளித்த பேட்டி:
ஓட்டு போடும் இயந்திரத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று வாக்காளர்கள் பட்டனை அழுத்தும் பகுதி. இதை பேலட்டிங் யூனிட் என்கிறோம். இன்னொன்று இந்த இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்.
இந்த இரண்டு யூனிட்களும் ஒன்றுடன் ஒன்று நேரடி இணைப்பில் இருக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதி கூறுகிறது. ஆனால், இந்த தேர்தலில் எம்3 என்ற புதிய ஓட்டிங் மெஷினை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்கிறது. அதில் பேலட்டிங் யூனிட்டுக்கும், கன்ட்ரோல் யூனிட்டுக்கும் நடுவில் ஒரு கருவி வைக்கப்படுகிறது.
நாம் செலுத்திய ஓட்டு சரியாக பதிவு செய்யப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள வசதியாக, சிறு தாளில் அவரது ஓட்டுப்பதிவை அச்சிட்டு காட்டும் பிரின்டர் அது. விவிபேட் என்கின்றனர். வேட்பாளருக்கு உரிய சின்னத்தை அவரது பெயருக்கு நேராக பதிவேற்றும் சிம்பல் லோடிங் யூனிட் என்ற கருவியை இந்த பிரின்டரில் பொருத்தி உள்ளனர்.
இதனால், பேலட்டிங் யூனிட்டுக்கும், கன்ட்ரோல் யூனிட்டுக்கும் நேரடி இணைப்பு இல்லாமல் போகிறது. வாக்காளர் எந்த பட்டனை அழுத்தினார் என்ற தகவலை பேலட்டிங் யூனிட்டுக்கு பதிலாக, பிரின்டர் தான் கன்ட்ரோல் யூனிட்டுக்கு அனுப்பும்.
இப்படி நடுவில் ஒரு யூனிட்டை வைப்பதால் இயந்திரங்களின் தகவல் பரிமாற்றத்தில் குளறுபடி ஏற்படலாம் அல்லது ஏற்படுத்த முடியும். தேர்தல் கமிஷனும் இதை மறுக்கவில்லை. 2 சதவீதம் வரை தவறு நடக்க வாய்ப்பு உள்ளதாக ஒப்புக் கொண்டது.
இது, விதிகளுக்கு எதிரானது என்பதையும் தலைமை தேர்தல் கமிஷனரிடம் தெரிவித்தோம்; பதில் வரவில்லை. எனவே, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை ஏதாவது சில சாவடிகளில் மட்டும் எடுத்து எண்ணாமல், அனைத்து சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று கமிஷனுக்கு ஆணையிட வேண்டும் என்பதையும் கோரிக்கையாக வைத்துள்ளோம்.
மக்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்த சந்தேகம் இருந்தால் தேர்தலே அர்த்தமற்று போய்விடும். சந்தேகத்தை போக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் பொறுப்பு.

