வாக்காளர்கள் பெயர் திடீர் நீக்கம்: தேர்தல் அதிகாரிக்கு தி.மு.க., மனு
வாக்காளர்கள் பெயர் திடீர் நீக்கம்: தேர்தல் அதிகாரிக்கு தி.மு.க., மனு
ADDED : செப் 05, 2024 02:00 AM

சென்னை: 'வாக்காளர்களிடம் எந்த தகவலையும் தெரிவிக்காமல், வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான பெயர்களை, தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நீக்கியுள்ளது' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுக்கு, தி.மு.க., அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பிஉள்ள மனு:
வாக்காளர் பட்டியலில் இருந்து, ஆயிரக்கணக்கான பெயர்கள் சமீபத்தில் நீக்கப்பட்டிருப்பது, எங்கள் கவனத்திற்கு வந்தது. வாக்காளர்களிடம் எந்த தகவலையும் தெரிவிக்காமல், தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக நீக்கம் செய்துள்ளது.
இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க, பதிவு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதிகாரிகள் தங்கள் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றாமல், மோசடித்தனத்துடன் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுத்துகிறது.
வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்தும், அதே முகவரியில் பல ஆண்டுகளாக வசித்தும், கடந்த தேர்தல்களில் ஓட்டு அளித்தும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முறையான தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.