ADDED : மே 13, 2024 03:04 AM

கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க., ஆட்சி என்பது, மக்களை வாட்டி வதைக்கிற ஆட்சியாக, மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத ஆட்சியாக உள்ளது. போதையில் மூழ்கியுள்ள ஆட்சியாக, சாராய ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிற நிலையில், தி.மு.க., ஆட்சி 'செயலாட்சி' என, முதல்வர் பதிவு செய்திருப்பது நகைப்புக்கு உரியதாக உள்ளது.
மின் கட்டணம் இரு மடங்கிற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு, 5 ரூபாய்; டீசல் விலை லிட்டருக்கு, 4 ரூபாயும் குறைக்கப்படும் என்ற தி.மு.க., வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
கல்விக்கடன் ரத்து, 'நீட்' தேர்வு ரத்து, ஏழை மக்கள் பசி தீர்க்க, 500 இடங்களில் உணவகம், புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் என்றெல்லாம், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஓய்வூதிய பலன்களையே அளிக்காத அவல நிலை நிலவுகிறது. இந்த அவலத்தையே செயலாட்சி என, முதல்வர் சொல்கிறாரா?
பட்டாசு ஆலையில் அடிக்கடி விபத்து, உயிரிழப்பு, அன்றாடம் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் நடக்கிறது. தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது.
தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது செயலாட்சி அல்ல; செயலற்ற ஆட்சி; பொய்யாட்சி.
- பன்னீர்செல்வம்,
முன்னாள் முதல்வர்