அரசு ஊழியர்களுக்கு தி.மு.க., செய்வது பச்சை துரோகம்: சீமான் காட்டம்
அரசு ஊழியர்களுக்கு தி.மு.க., செய்வது பச்சை துரோகம்: சீமான் காட்டம்
ADDED : பிப் 27, 2025 07:07 PM
சென்னை:'பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராடியபோது, எதிர்க்கட்சியாக இருந்தபோது, தி.மு.க., ஆதரித்தது. ஆட்சிக்கு வந்ததும் அவர்களுக்கு துரோகம் செய்கிறது' என, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த தேர்தலின்போது, 'ஆட்சிக்கு வந்த பின், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம்' என, வாக்குறுதி அளித்த தி.மு.க., தலைமை, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் நிறைவேற்றாமல் உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்த பின், அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளது.
தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்து விட்டு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என ஏமாற்றுவது, அரசு ஊழியர்களுக்கு செய்யும் பச்சை துரோகம்.
இந்தியாவில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வாய்பே இல்லை எனக் கூறப்பட்டது. ஆனால், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள், பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறி விட்டன.
தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் இரண்டு திராவிட கட்சிகளும், அதிகார பலம் கொண்டு, அரசு ஊழியர்களை அடக்கி, ஒடுக்கி, அச்சுறுத்தி, போராட்டத்தை நீர்த்து போகச் செய்கின்றன. எதிர்க்கட்சியாக இருந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு ஆதரவு. ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் துரோகம் தான் செய்வர் என்பதால், தி.மு.க.,வை நிரந்தரமாக எதிர்க்கட்சி வரிசையில் அமர வைக்க, அவர்கள் தயாராகி விட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.