ADDED : ஆக 18, 2024 12:34 AM

சென்னை: பெண் டாக்டர் படுகொலைக்கு நீதி கேட்டு, டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், தமிழக அரசு மருத்துவமனைகளில், ஒரு மணி நேரம் புறநோயாளிகள் பிரிவு பாதிக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை கண்டித்து, இந்திய மருத்துவ சங்கம், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அதற்கு, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனைகளில் நேற்று காலை 7:30 முதல் 8:30 மணி வரை, 1 மணி நேரம் புறநோயாளி கள் பிரிவு சிகிச்சையை புறக்கணித்த டாக்டர்கள், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, பேரணி உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
டாக்டர்களின் போராட்டத்தால், சில இடங்களில் காலையில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை நோயாளிகளுக்கு ஏற்பட்டது.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த பேரணியில், 100க் கும் மேற்பட்ட டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
ஒரு சில தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளிலும் புறநோயாளிகள் சிகிச்சையை, டாக்டர்கள் புறக்கணித்தனர்.

