'அடுத்த நான்கு நாட்களுக்கு அலட்சியம் வேண்டாம்' : ராமதாஸ் எச்சரிக்கை
'அடுத்த நான்கு நாட்களுக்கு அலட்சியம் வேண்டாம்' : ராமதாஸ் எச்சரிக்கை
ADDED : ஏப் 16, 2024 04:32 AM

சென்னை : 'அடுத்த நான்கு நாட்கள் அலட்சியமாக இருக்காமல், தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்' என, பா.ம.க.,வினருக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: தேர்தல் நடக்கவுள்ள ஏப்., 19ம் தேதிக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளன. தேர்தல் களத்தில், பா.ம.க., தொண்டர்களின் உழைப்பு பெரும் நம்பிக்கை அளிக்கிறது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராவது, எப்போதோ உறுதியாகி விட்டது.
தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றப் போவது உறுதி. இதற்கு தமிழகத்தின் பங்களிப்பு என்ன, பா.ம.க.,வின் பங்களிப்பு என்ன என்பது தான், இப்போதுள்ள கேள்வி.
பா.ம.க., உட்பட கூட்டணி வேட்பாளர்கள், 40 பேரும் வெற்றி பெற வேண்டும் என்றால், அடுத்த நான்கு நாட்களுக்கு கடுமையாக உழைக்க வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, கடுமையாக உழைத்து முன்னணியில் இருக்கிறோமே என்ற எண்ணம் வரக்கூடாது. அதிக நம்பிக்கை அலட்சியமாக மாறி விடக்கூடாது.
பயிரை சாகுபடி செய்யும் காலத்தை விட, அறுவடை செய்யும் காலத்தில் தான் அதிக கவனம் வேண்டும்.
அதன்படி அடுத்த நான்கு நாட்களுக்கு பா.ம.க., வினர் மிகவும் விழிப்புடனும், கடமை உணர்வுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும். ஓட்டுச்சாவடி கமிட்டியில் உள்ளவர்கள், ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது, 10 முறையாவது சந்தித்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

