ADDED : மே 04, 2024 12:21 AM
சென்னை:''சுட்டெரிக்கும் வெயிலில், கோடைகால பழங்கள் சாப்பிடுங்கள். வயிறு முட்ட சாப்பிட வேண்டாம்; 'ஷூ 'அணிவதை தவிருங்கள்,'' என, யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் கைநுட்பத்துறை தலைவர் ஓய்.தீபா கூறினார்.
இதுகுறித்து, டாக்டர் ஓய்.தீபா கூறியதாவது:
தமிழகத்தில் கோடைவெயில் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் உடல்நலனில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். உடலில் நீர்சத்து குறைந்தால், பல்வேறு விதமான தொற்று பாதிப்புகள் ஏற்படும். எனவே, தினமும் மூன்று முதல் மூன்றரை லிட்டர் குடிநீரை கட்டாயம் அருந்த வேண்டும். மேலும், மோர், இளநீர், எலுமிச்சை ஜூஸ், நுங்கு போன்றவையும் சாப்பிடலாம்.
கோடை காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடிய வெண்டக்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம். மேலும், கோடைகால பழங்களான மாம்பழத்தை தவிர்க்க வேண்டாம். கோடைகால பழங்கள், கோடைகாலத்தில் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை இயற்கையாகவே தடுக்க கூடியவை. எனவே, கோடைகாலத்தில் கிடைக்கக்கூடிய பழங்களை சாப்பிடுங்கள்.
அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலி என்ற முறையில் சாப்பிடுவதால், செரிமான பிரச்னை ஏற்படாது. அத்துடன் காரம், அதிக எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம். அவற்றை சாப்பிடும் போது, ஏற்கனவே வெளியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், காரம் கலந்த உணவு சாப்பிடுவதால் உடலில் உஷ்ணம் அதிகரித்து, மலம் கழிக்கும் இடத்தில் எரிச்சல் அல்லது ரத்த கசிவு ஏற்படும். தற்போது, மூலம் போன்ற நோயால், இரண்டு வயது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
கோடையில் மெல்லிய ஆடைகளை அணியுங்கள். உடலில் வியர்வை வெளியேறுவது அவ்வளவு நல்லது. வியர்வையில் தான் உடலில் உள்ள யூரியா வெளியேறும். இல்லையென்றால், சிறுநீரகத்தில் தங்கி பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், 'ஷூ' அணியாதீர். மாறாக செருப்பு அணிவதன் வாயிலாக உடலில் குளிர்ச்சி ஏற்படும். அதிகம் தண்ணீர், மெல்லிய ஆடை போன்ற வழிமுறைகளை பின்பற்றினால், கோடை வெயிலில் இருந்து தப்பிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.