ADDED : ஏப் 01, 2024 01:52 AM

சென்னை: வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு, இரண்டு முறை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர், பத்திரப்பதிவை முடித்தவுடன், பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். இதில், மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, விதிமுறைகளை அரசு திருத்தி அமைத்துள்ளது. மக்களுக்காக, அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவே, வருவாய் துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
இதில், முக்கிய திருப்பமாக, ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்தையும் விற்கும் போது, அதற்கான பத்திரப்பதிவுடன், பட்டா மாறுதல் பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டது.
இதன்படி, பத்திரப்பதிவின் போது, பட்ட மாறுதலுக்காக, 450 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக, சார் - பதிவாளரே பட்டா, பத்திரம், அடையாள சான்று போன்ற விபரங்களை சரி பார்த்து, ஆன்லைன் முறையில் அதை பதிவிடுகிறார்.
இதற்கான ஒப்புகை சீட்டும், சொத்து வாங்கும் நபருக்கு வழங்கப்படுகிறது. இந்த ஒப்புகை சீட்டு அடிப்படையில், வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி, பெயர் மாற்றப்பட்ட பட்டா பிரதியை பெற வேண்டும்.
ஆனால், வருவாய் துறை அதிகாரிகள், ஆன்லைன் முறையில் சார் - பதிவாளர்கள் அனுப்பும் விபரங்களை ஏற்க மறுக்கின்றனர். அதனால், பட்டா மாறுதல் பணிகள் முடங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பட்டா மாறுதலுக்கு மீண்டும் மீண்டும் கட்டணம் வசூலிப்பது ஏன் என்றும், அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து, நில அளவை துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பத்திரப்பதிவு நிலையிலேயே, சொத்து குறித்த அனைத்து ஆவணங்களும், சார் - பதிவாளர் பார்வைக்கு வருகின்றன. அவர், சரிபார்த்து உறுதி செய்த பின், பட்டா பெயர் மாற்ற வேண்டியது தான், தாலுகா அலுவலக அதிகாரிகள் பணி.
இதில், அரசு பிறப்பித்த விதிகளுக்கு மாறாக, தானியங்கி முறையில் நடக்கும் பட்டா மாறுதல் பணிகளை, கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் முடக்குகின்றனர்.
பட்டா பெயர் மாற்றத்துக்கு மீண்டும் விண்ணப்பம் செய்யும்படி கட்டாயப்படுத்துவதும், கட்டணம் வசூலிப்பதும் தொடர்கிறது. இது, அரசின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயல். இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் மீது, வருவாய் துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

