இரட்டைப்பாதை நிறைவு; தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் சேவை எப்போது?
இரட்டைப்பாதை நிறைவு; தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் சேவை எப்போது?
ADDED : மார் 06, 2025 01:38 AM

சென்னை: மதுரை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை பணிகள் முடிந்துள்ள நிலையில், கூடுதல் ரயில் சேவை துவங்காதது பயணியரிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழகத்தின் கனவு திட்டமான, சென்னை எழும்பூர் -- கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை திட்டம், 1998ல் துவங்கி, 2021ல் மதுரை வரை முடிக்கப்பட்டு, ரயில் சேவையும் துவக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக, மதுரை -- திருநெல்வேலி -- நாகர்கோவில் -- கன்னியாகுமரி இடையே, மின்மயமாக்கலுடன் இரட்டை பாதை அமைக்கும் பணிகளை, 2022ல் முடிக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டது.
கொரோனா பாதிப்பு, நிதி நெருக்கடி, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, பணிகள் துவங்கி முழு வீச்சில் நடந்ததால், கடந்த ஆண்டு அக்., மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டன.
இருப்பினும், இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படாதது, பயணியரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பயணியர் ஏமாற்றம்
கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்க தலைவர் ஸ்ரீராம், செயலர் எட்வர்ட் ஜெனி ஆகியோர் கூறியதாவது:
சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு, தற்போது இயக்கப்படும் விரைவு ரயில்கள் போதுமானதாக இல்லை. தற்போதுள்ளதை காட்டிலும், 100 சதவீதம் தேவை இருக்கிறது.
எனவே, பயணியருக்கான ரயில்களை அதிகரித்து இயக்க வேண்டும். சென்னை - கன்னியாகுமரி இடையே, பல ஆண்டுகளாக நடந்து வந்த இரட்டை பாதை பணிகள் முடிந்து, ஐந்து மாதங்கள் ஆகி விட்டன.
இருப்பினும், கூடுதல் ரயில்களின் சேவை துவங்காதது, பயணியரிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், ரயில் நிலையங்களை அழகுபடுத்தும் பணிகளை தவிர்த்து விட்டு, கூடுதல் இணைப்பு ரயில் பாதைகள், நடைமேடைகள் அமைப்பது, பணிமனைகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு பணிகளில், ரயில்வே கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சொல்வது என்ன?
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை -- கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை பணி முடிந்ததால், விரைவு ரயில்களில் பயண நேரம் 20 நிமிடம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும்போது, பயண நேரம் மேலும் குறையும்.
மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம், நாகர்கோவில் உள்ளிட்ட, முக்கிய ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகளும், யார்டுகள் மேம்படுத்தும் பணிகளும் நடப்பதால், கூடுதல் ரயில்களை இயக்குவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது.
இந்த பணிகள் முடிந்த பின், தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.