செங்கோட்டையன் கூட்டத்தில் கலாட்டா தூண்டுதல் இருக்குமோ என சந்தேகம்
செங்கோட்டையன் கூட்டத்தில் கலாட்டா தூண்டுதல் இருக்குமோ என சந்தேகம்
ADDED : மார் 05, 2025 07:06 PM
கோபி:கோபியில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, சேர்கள் வீசப்பட்டன.
ஈரோடு அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், கோபியில் நடந்தது. இதில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், கோபி எம்.எல்.ஏ.,வுமான செகோட்டையன் தலைமை வகித்து பேசினார்.
அப்போது பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த பிரவீன் என்பவர் எழுந்து, செங்கோட்டையனை பார்த்து, 'ஐயா இங்கு இவ்வளவு பெரிய கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து அந்தியூரில் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. கஷ்டப்பட்டு கட்சிக்காக வேலை செய்துள்ளோம். கட்சியின் மாவட்டச் செயலர் நீங்கள் தான். அதனால், இதை உங்களுக்கு சொல்கிறேன்' என்றார்.
இதையடுத்து, பிரவீனை மேடைக்கு அழைத்துப் பேசினார் செங்கோட்டையன். அவர் சொன்ன சமாதானத்தை பிரவீன் ஏற்காமல் மல்லுகட்டினார்.
இதையடுத்து, மண்டபத்தில் இருந்து வேறு சிலரும் செங்கோட்டையனுக்கு எதிராக கோஷமிட, கூட்டத்துக்கு வந்திருந்த செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கோஷமிட்டவர்களோடு சண்டைக்குப் போனார்கள்.
இதனால், மண்டபத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டன. ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் சேர்களை எடுத்து வீசியதால், கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின், ஒரு சிலர், கூட்டத்தில் இருந்த பிரவீனை அரங்கில் இருந்து வெளியேற்றினர்.
பின், செங்கோட்டையன் பேசுகையில், '' அந்தியூர் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா துாண்டி விட்டுத்தான் பிரவீன் இங்கு வந்து சண்டையிடுகிறார். அடிப்படையில் அவர் கட்சி உறுப்பினரே அல்ல. உறுப்பினர் அல்லாதவரை எப்படி கூட்டத்து அழைக்க முடியும்? குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு சிலரால் பிரவீன் அனுப்பபட்டிருக்கிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில் அந்தியூர் தொகுதி தோல்வியடைந்ததற்கு முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாதான் காரணம். வாக்காளர்களிடம், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட வேண்டாம் என பிரசாரம் செய்துள்ளார். அது தொடர்பான ஆதாரம் எங்களிடம் உள்ளது.
இப்படி கட்சிக்கு எதிராக பெரும் துரோகம் இழைத்துவிட்டு, செயல்வீரர்கள் கூட்டத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்த, தன்னுடைய ஆள் ஒருவரையும் அனுப்பி உள்ளார். சம்பந்தப்பட்ட பிரவீன் என்பவரை, கட்சி நிகழ்ச்சி எதிலும் பார்த்ததில்லை,'' என்றார்.
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறியதாவது:
ஈரோடு பகுதியில் சொந்தக்கட்சிக் கூட்டங்களில் நிறைய பேசியிருக்கிறார் செங்கோட்டையன். எதிலும் இப்படி பிரச்னை ஏற்பட்டதில்லை. சமீபத்தில் பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., படங்கள் போடவில்லை என்று விமர்சித்த பின், சின்ன சின்ன சலசலப்புகள் ஏற்படுகின்றன். தற்போது, கட்சிக்கே சம்பந்தமில்லாத ஒருவரை வைத்து பிரச்னையை ஏற்படுத்தி உள்ளனர். பிரவின் பின்னணியில் வலுவான கரம் உள்ளதாக சந்தேகிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.