ADDED : மே 29, 2024 12:54 AM
சென்னை:'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில், ஊராட்சி வாரியாக ஒதுக்கப்படும் வீடுகள் விபரத்தை, வரும் 31ம் தேதிக்குள் அனுப்ப, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் முதல் கட்டமாக 2024 - 25ம் ஆண்டில், ஒரு லட்சம் புதிய வீடுகள் தலா, 3.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பொன்னையா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதியுள்ள கடிதம்:
குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருப்போர்; கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் மறு சர்வே பட்டியலில் தகுதியானவர்கள் ஆகியோரை, பயனாளிகளாக சேர்க்க வேண்டும்.
பயனாளிக்கு சொந்தமாக நிலம், பட்டா இருக்க வேண்டும். புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள குடிசைக்கு பதிலாக, இத்திட்டத்தில் வீடு கட்ட இயலாது.
பயனாளிகளை தேர்வு செய்ய, ஊராட்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர், துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோர் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும்.
ஊராட்சி பெயர், குடியிருப்புகள் எண்ணிக்கை, பயனாளி பெயர் போன்ற விபரங்களை, வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
திட்டத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் செயல்படுத்த வேண்டும். அதற்கு பயனாளிகள் பட்டியலுக்கு, கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 25 முதல் 50 வீடுகள் வரை கட்டுமான பணி நிறைவு பெறாமல் இருந்தால், அந்த ஊராட்சியை இந்த ஆண்டு பட்டியலில் சேர்க்கக் கூடாது.
அதேபோல், வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தில், 50 வீடுகளுக்கு மேல் நிலுவை இருந்தால் பரிசீலிக்கக் கூடாது.
வட்டார அளவில், ஊராட்சி அளவில், நடப்பாண்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகள் ஒதுக்கப்பட்ட விபரத்தை, வரும் 31ம் தேதிக்குள், ஊரக வளர்ச்சித் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.