வறண்ட நீர்நிலைகளில் துார்வாரும் பணி; நிதியின்றி நீர்வளத்துறையினர் தவிப்பு
வறண்ட நீர்நிலைகளில் துார்வாரும் பணி; நிதியின்றி நீர்வளத்துறையினர் தவிப்பு
ADDED : மே 10, 2024 04:36 AM
சென்னை: வறண்டுள்ள நீர்நிலைகளை துார்வாருவதற்கு நிதி கிடைக்காததால், நீர்வளத் துறையினர் தவித்து வருகின்றனர்.
நீர்வளத்துறை வாயிலாக 90 அணைகள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள், பாசன கால்வாய்கள் உள்ளிட்டவை பராமரிக்கப்படுகின்றன.
அ.தி.மு.க., ஆட்சியில், 5,000க்கும் மேற்பட்ட ஏரிகள், குடிமராமத்து திட்டம் மற்றும் மத்திய அரசின் ஏரிகள் புனரமைப்பு திட்டம் வாயிலாக புனரமைக்கப்பட்டன.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், குடிமராமத்து திட்டத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, திட்டம் கைவிடப்பட்டது. அதற்கு மாற்றாக துார்வாரும் பணி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது, கோடை மற்றும் கடும் வெப்பம் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆறுகள், அணைகள், ஏரிகள் வறண்டு கிடக்கின்றன.
இவற்றை துார்வாரினால், கூடுதல் நீரை சேமித்து, பாசனம், குடிநீர், தொழிற்சாலைகளின் நீர்த்தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
விவசாய நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை வழங்க முடியும். ஆனால், அரசு நிதி ஒதுக்காததால், நீர்வளத் துறையினர் கையை பிசைந்து வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, நீர்நிலைகள் நிரம்பி இருந்தன. இப்போதுதான், பல நீர்நிலைகள் வறண்டுள்ளன. இதுபோன்ற சந்தர்ப்பம், மீண்டும் எப்போது அமையும் என்பது தெரியாது. இந்த நேரத்தை பயன்படுத்தி நீர்நிலைகளை துார்வாரினால், அவற்றில் கூடுதல் நீரை சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தலாம்.
எனவே, தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்று, நீர்நிலைகளை துார்வாருவதற்கு, அரசு சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், பொதுமக்களின் பங்களிப்புடன் நீர்நிலைகளை துார்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் துவங்கிவிடும் என்பதால், அதற்கு முன்பாக, இதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.