15 மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை கோடை மழையால் தீர்ந்தது
15 மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை கோடை மழையால் தீர்ந்தது
ADDED : மே 18, 2024 01:47 AM

சென்னை: கோடை மழையால், 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு சிக்கல் நீங்கியுள்ளது.
தமிழகத்தில் 2023ம் ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்தது. இதனால், நீராதாரங்களுக்கு போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை.
அணைகள், ஏரிகளில் இருந்த நீர், பாசனம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இதனால், நடப்பாண்டு ஏப்ரல் முதல், பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை துாக்கியது. காவிரி, பவானி, சிறுவாணி, கொள்ளிடம், தாமிரபரணி உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு நீர் வழங்குவதில் சிக்கல் எழுந்தது.
மோட்டார்களை விடிய விடிய இயக்கி, நிலத்தடி நீரை உறிஞ்சி, தமிழக குடிநீர் வடிகால் வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. நிலத்தடி நீர் மட்டமும் வேகமாக குறைந்ததால் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், கோடை மழையால் புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ண கிரி, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு குடிநீர் சிக்கல் நீங்கியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், பிலுகுண்டுலு நீரளவு தளத்தை கடந்து, தமிழக எல்லைக்கு வினாடிக்கு, 2,200 கன அடி நீர் வரத்து உள்ளது.
ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களில், காவிரி நீரோட்டம் மெல்ல அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று பகல் நிலவரப்படி, வினாடிக்கு 500 கன அடி நீர்வரத்து கிடைத்தது.

