'அ.தி.மு.க., ஆட்சியிலும் போதை பொருள் புழங்கியது': சொல்கிறார் ம.தி.மு.க., துரை
'அ.தி.மு.க., ஆட்சியிலும் போதை பொருள் புழங்கியது': சொல்கிறார் ம.தி.மு.க., துரை
ADDED : ஜூன் 03, 2024 06:29 AM

அவனியாபுரம் : ''அ.தி.மு.க., ஆட்சியிலும் போதைப்பொருள் குற்றம் நடந்துள்ளது,'' என, ம.தி.மு.க., முதன்மைச் செயலர் துரை தெரிவித்தார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களால் 39 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். பிரசாரங்களில், தமிழக அரசின் திட்டங்களை கூறி, ஓட்டு கேட்டோம். கருத்துக்கணிப்புப்படி தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும்.
தி.மு.க., ஆட்சியில் சமூக விரோதிகள் சட்டத்தை கையில் எடுப்பர் என அ.தி.மு.க, பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார். அவருடைய ஆட்சியிலும் சட்டத்துக்கு புறம்பான செயல்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள்கள் உள்ளிட்ட குற்றங்கள் நடந்துள்ளன.
தமிழகத்தில், மது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பது தான் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் கருத்து. மதுவுக்கு எதிரான கொள்கையில் உறுதியாக உள்ளோம். மது இல்லாத தமிழகம் அமைய வேண்டும் என தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மத்திய பா.ஜ., அரசு, 10 ஆண்டுகளில் என்ன செய்தது என்று கூறவில்லை. மக்களுக்கான அடிப்படை பிரச்னைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறாமல், மதம், ஜாதியைப் பற்றி பேசி மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் பேச்சுக்கள் தான் இருந்தன.
பா.ஜ., கூட்டணி, 350 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்ற கணிப்பின் நிலை, நாளை தெரிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.