மது போதையில் 'கூகுள் மேப்'பை பார்த்து கார் ஓட்டி 7 பேர் மீது ஏற்றி இறக்கிய பெண்
மது போதையில் 'கூகுள் மேப்'பை பார்த்து கார் ஓட்டி 7 பேர் மீது ஏற்றி இறக்கிய பெண்
UPDATED : மே 13, 2024 03:59 AM
ADDED : மே 13, 2024 03:57 AM

அசோக் நகர் : சென்னை, அசோக் நகர் 10வது தெருவைச் சேர்ந்தவர் சரிதா, 45. இவரது வீட்டில், நேற்று முன்தினம் மாலை விசேஷ நிகழ்ச்சி நடந்தது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து உறவினர்கள் வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து, வீட்டில் இடப்பற்றாக்குறை இருந்ததால், வீட்டின் முன் சிறு தெருவில் படுத்து உறங்கினர்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை 4:00 மணியளவில் தறிக்கெட்டு வந்த கார், கண்ணிமைக்கும் நேரத்தில் துாங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறி இறங்கியது. ஆனால், காரை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதிமக்கள் எழுந்தனர்.
அப்பகுதி முட்டு சந்து என்பதால் வேறு வழியின்றி கார் நிறுத்தப்பட்டது. அதேநேரம், அப்பகுதிமக்கள் மஹாராஷ்டிரா பதிவெண் கொண்ட 'ஜீப்' காரை மடக்கினர்.
![]() |
அப்போது, காரை ஓட்டியது வடமாநில பெண் என்பது தெரிய வந்தது. அவருக்கு தமிழ் தெரியவில்லை. மேலும், அவர் மது போதையில் காரை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில், நான்கு பெண் உட்பட ஏழு பேர் பலத்த காயம் அடைந்தனர். இதில், சரிதா, பிள்ளை நாயகி ஆகியோருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காரை பறிமுதல் செய்து அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தனர்.
இதில், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வைஷாலி, 41, என்பதும், மதுபோதையில் கார் ஓட்டியதும் உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் தங்கி உள்ள வைஷாலி, அசோக் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு, மொபைல் போனில் 'கூகுள் மேப்'பை பார்த்து கார் ஓட்டி வந்துள்ளார்.
கூகுள் மேப் தெரு மற்றும் முட்டு சந்துகள் வழியாக பாதை காட்டி உள்ளது. அந்தவகையில், சரிதா வீட்டின் வழியாக சென்ற கார், தெருவில் படுத்து உறங்கியவர்கள் மீது ஏறி இறங்கியது தெரிந்தது.
போலீசார், வைஷாலி மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரிக்கின்றனர்.
நாங்கள் சரிதா வீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம். இடப்பற்றாக்குறையால், வீட்டு வாசலில் தெருவோரத்தில் படுத்து துாங்கினோம். அப்போது தறிக்கெட்டு கார் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில், வீட்டு வாசலில் படுத்து துாங்கியவர்கள் மீது கார் ஏறி இறங்கியது. ஆனால், கார் ஓட்டிய பெண், 'என்ன நடந்தது என்பது கூட தெரியாத அளவிற்கு போதையில் இருந்தார். அவருக்கு தமிழும் புரியவில்லை. அவரது சென்னை உறவினர் வந்து, நிலைமையை விளக்கினார்.
-விபத்தை பார்த்தஉறவினர்கள்