பராமரிப்பு பணிகளால் சனிக்கிழமை பத்திரப்பதிவு பாதிப்பு
பராமரிப்பு பணிகளால் சனிக்கிழமை பத்திரப்பதிவு பாதிப்பு
ADDED : செப் 02, 2024 01:49 AM

சென்னை: தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளால், சனிக்கிழமைகளில் செயல்படும் அலுவலகங்களில், பத்திரப்பதிவு பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துஉள்ளது.
தமிழகத்தில், அதிக பத்திரங்கள் பதிவாகும், 100 சார் - பதிவாளர் அலுவலகங்கள் மட்டும் சனிக்கிழமைகளில் செயல்படுகின்றன. பணிக்கு செல்வோர் விடுப்பு எடுக்காமல், பத்திரப்பதிவு செய்ய இது உதவியாக உள்ளது.
இதற்காக, சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்ய முன்பதிவு செய்து, 'டோக்கன்' பெறுகின்றனர். ஆனாலும், பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை என்று அவர்கள் புகார் கூறுகின்றனர்.
இது தொடர்பாக, அகில இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆ.ஹென்றி வெளியிட்ட அறிக்கை:
பொது மக்களுக்கு பலன் அளிக்க வேண்டும் என்பதற்காக, சனிக்கிழமைகளில், 100 சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஆனால், உரிய முறையில் டோக்கன் பெற்றாலும், தற்போது சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை.
பதிவுத்துறையின், 'ஸ்டார் 2.0' சாப்ட்வேரில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால், பத்திரப்பதிவு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பத்திரத்துக்கும் இணையதளம் வழியாக, பட்டா சரிபார்ப்பு வசதி உள்ளது.
இதை பயன்படுத்துவதில் அதிக தாமதம் ஏற்படுவதால், பத்திரப்பதிவு தாமதமாகிறது. ஸ்டார் 3.0 சாப்ட்வேர் உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
அதுவரை தற்போது உள்ள சாப்ட்வேர் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை, விடுமுறை நாட்களில் மட்டும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.