மக்காச்சோளத்திற்கு ஒரு சதவீதம் செஸ் வரி: தமிழக அரசு நீக்க துரை வைகோ கோரிக்கை
மக்காச்சோளத்திற்கு ஒரு சதவீதம் செஸ் வரி: தமிழக அரசு நீக்க துரை வைகோ கோரிக்கை
UPDATED : மார் 04, 2025 01:02 AM
ADDED : மார் 03, 2025 05:27 AM

பெரம்பலுார் : ''தமிழக அரசு, மக்காச்சோளத்திற்கு விதித்துள்ள, 1 சதவீத செஸ் வரியை நீக்க வேண்டும்,'' என, திருச்சி ம.தி.மு.க., எம்.பி., துரை வைகோ கோரிக்கை விடுத்தார்.
தமிழக அரசு மக்காச்சோளத்திற்கு விதித்துள்ள 1 சதவீத செஸ் வரியை நீக்க வேண்டும்; வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ம.தி.மு.க., சார்பில் பெரம்பலுாரில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
பயிர் காப்பீடு திட்டம்
இதில், கட்சியின் முதன்மை செயலரும், திருச்சி எம்.பி.,யுமான துரை வைகோ பேசியதாவது: வேளாண் பொருட்களுக்கு, மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தின் விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனம் கொள்ளை லாபம் பார்ப்பதற்காகவே இந்த பயிர் காப்பீடு திட்டம் பயன்பெறுகிறது. அதை தளர்த்த வேண்டும்.
முக்கிய வேளாண் பயிர்
டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்னையான நெல் கொள்முதலில் ஈரப்பதத்தின் சதவீதத்தை, 22 ஆக உயர்த்த வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு முடக்க பார்க்கிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இந்த திட்டத்தில் தொழிலாளர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை. தென்காசி, துாத்துக்குடி, விருதுநகர், பெரம்பலுார் உட்பட பல்வேறு மாவட்டங்களில் முக்கிய வேளாண் பயிராக மக்காச்சோளம் உள்ளது.
விலை ஏற்றம்
வானம் பார்த்த பூமியுடைய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இந்த மக்காச்சோள விவசாயம் தான் அச்சாணியாக இருந்து காத்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு மக்காச்சோளத்திற்கு ௧ சதவீதம் செஸ் வரி விதித்துள்ளது. அதை செலுத்திய பிறகே மக்காச்சோளத்தை சந்தைப்படுத்த முடியும் என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். விதை, உரம் விலை ஏற்றம், காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வனவிலங்குகளால் சேதம் என, பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
நடவடிக்கை
இயற்கையும் விவசாயிகளை பாதிப்படைய செய்கிறது. அதனால் உரிய லாபம் கிடைப்பதில்லை. தற்போது கூடுதலாக தமிழக அரசு மக்காச் சோளத்திற்கு ௧ சதவீதம் செஸ் வரி விதித்துள்ளதால், மக்காசோளம் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவர். இந்த செஸ் வரியை நீக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் மற்றும் ம.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
முதல்வர் தாயுள்ளத்தோடு அணுகணும்!
இது தொடர்பாக, கட்சியின் முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பி.,யுமான துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்காசி, பெரம்பலூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மத்திய மாவட்டங்களில் மக்காச்சோளம் பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு மாநில அரசு 1 சதவீதம் செஸ் விதித்துள்ளது. இதனால், மக்காச்சோள விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
பன்றிகள் தொல்லை
வறட்சி, காலநிலை மாற்றம், மழை வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், இடுபொருட்கள் விலை உயர்வு, மயில், காட்டுப் பன்றிகளின் தொல்லை போன்றவற்றால் கடும் துயரில் உள்ள விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாத சூழலில் உள்ளனர். எனவே, 1 சதவீத சந்தை வரியை நீக்க வேண்டும்.
தாயுள்ளம்
இது தொடர்பாக முதல்வரிடம் கடந்த பிப்., 2ம் தேதி மனு அளித்துள்ளோம். ஜன., 28ம் தேதி துணை முதல்வர் உதயநிதியிடமும், ஜன., 30ம் தேதி, வேளாண் துறை அமைச்சர் பன்னீர் செல்வம், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரிடமும் கோரிக்கை விடுத்தோம். விவசாயிகளின் இப்பிரச்னையை முதல்வர் தாயுள்ளத்தோடு அணுகி, 1 சதவீத செஸ்ஸை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, துரை வைகோ பேசினார்.