ADDED : மார் 07, 2025 07:39 PM
சென்னை:மக்காச்சோளத்திற்கு விதித்த ஒரு சதவீதம் 'செஸ்' வரிக்கு விலக்களித்த முதல்வர் ஸ்டாலினுக்கு, ம.தி.மு.க., முதன்மைச் செயலர் துரை வைகோ நன்றி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், துாத்துக்குடி மற்றும் பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், பெருமளவில் மக்காச்சோளம் சாகுபடி நடக்கிறது. மக்காச்சோளத்திற்கு ஒரு சதவீதம் செஸ் வரி விதித்திருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்தனர். அதை நீக்க வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தேன்.
அதேபோல், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு ஆகியோரிடமும் மனு அளித்தேன். சமீபத்தில், பெரம்பலுாரில் மத்திய அரசை கண்டித்து, ம.தி.மு.க., நடத்திய ஆர்ப்பாட்டத்திலும், இக்கோரிக்கையை வேண்டுகோளாக வைத்தேன்.
அதற்கு பலன் கிடைத்து விட்டது. சந்தை வரி விதிப்பிலிருந்து மக்காச்சோளத்திற்கு விலக்கு அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்துள்ளது. முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் நன்றி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.