ADDED : ஜூலை 13, 2024 08:09 PM
சென்னை:குறைந்த ரத்த அழுத்த பாதிப்பால் பாதிக்கப்பட்ட தி.மு.க., பொதுச்செயலரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், 86, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் சிவா வெற்றி பெற்றதை ஒட்டி, சென்னை அறிவாலயத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில், முதல்வரும் தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, துரைமுருகன் திடீரென மயக்கமடைந்தார்.
உடனடியாக டாக்டரும், எம்.எல்.ஏ.,வுமான எழிலன், துரைமுருகனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். தொடர்ந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டதால் மயக்கம் ஏற்பட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

