ஈ.டி., விரித்த வலையில் சிக்காமல் செந்தில்பாலாஜி தம்பி 'டிமிக்கி'
ஈ.டி., விரித்த வலையில் சிக்காமல் செந்தில்பாலாஜி தம்பி 'டிமிக்கி'
ADDED : மார் 30, 2024 12:02 AM

சென்னை: அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஓட்டுனர், நடத்துனர், மெக்கானிக் வேலை வாங்கித் தருவதாக, 1.62 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
'
லுக் அவுட்' நோட்டீஸ்
இது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிந்துஉள்ளனர்.
செந்தில் பாலாஜியை, ஜூன், 14ல் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அசோக்குமாருக்கு நான்கு முறை, 'சம்மன்' அனுப்பினர்.
ஒருமுறை கூட அவர் ஆஜராகவில்லை. ஒன்பது மாதங்களுக்கு முன், தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கினர்.
அதன் பிறகும், அசோக்குமார் எங்கிருக்கிறார் என்பதைக் கூட, அமலாக்கத் துறை அதிகாரிகளால் துப்பு துலக்க முடியவில்லை. நேபாளத்திற்கு தப்பி விட்டதாகவும் கூறப்பட்டது.
கடந்தாண்டு ஆகஸ்டில் பெங்களூரில் சிக்கினார் என, தகவல் வெளியானது. அதற்கு உடனடியாக செய்திக்குறிப்பு வெளியிட்டு மறுத்தனர்.
எனினும் கைது நடவடிக்கையில் வேகம் காட்டாமல் உள்ளனர். செந்தில் பாலாஜி ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டு, 30 முறை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், அசோக்குமாரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உடந்தை
இதுகுறித்து, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரால் பாதிக்கப்பட்ட நபர்கள் கூறியதாவது:
பண மோசடிக்கு மூளையாக செயல்பட்டதே அசோக்குமார் தான். அவருக்கு உடந்தையாக, பினாமிகள் கார்த்திகேயன், சண்முகம் ஆகியோர் செயல்பட்டனர்.
கரூரில், 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து, பினாமிகள் பெயரில், 10.88 லட்சம் ரூபாய்க்கு வாங்கி மோசடி செய்துள்ளனர்.
இதற்கு அசோக்குமாரின் மனைவி, மாமியார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும். அசோக்குமாரை விரைந்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

