ADDED : ஜூன் 01, 2024 03:43 AM
சென்னை : தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை, மத்திய அரசிடம் அனுமதி கோரியது. மத்திய தொல்லியல் துறையின் இயக்குனர் இடமாற்றத்தால், தொல்லியல் ஆலோசனை வாரியமான, 'காபா'வின் கூட்டம் நடப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், கடந்த ஜனவரியில் கிடைக்க வேண்டிய அனுமதி இந்த வாரம் தான் கிடைத்துள்ளது.
இதையடுத்து, 5 கோடி ரூபாய் செலவில், அடுத்த வாரம் அகழாய்வை துவக்க, தமிழக தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே அகழாய்வு செய்த இடங்களான சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி ஆகிய இடங்களில் இந்தாண்டும் அகழாய்வுப்பணி நடக்க உள்ளது.
மேலும், புதிதாக தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலுார் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானுார் ஆகிய இடங்களிலும் அகழாய்வு செய்யப்பட உள்ளது. அதற்கான முதல்கட்ட பணிகளில், அந்தந்த பகுதி அகழாய்வு இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர்.