ADDED : ஏப் 23, 2024 12:57 AM
சென்னை: 'பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை காதில் வாங்காத தேர்தல் கமிஷன், நடுநிலைமை என்பதன் சுவடே இன்றி, அப்பண்பையே கைவிட்டுள்ளது' என, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டிஉள்ளார்.
அவரது அறிக்கை:
பிரதமர் மோடியின் நச்சுப் பேச்சு இழிவாகவும், மிகவும் வருத்தத்திற்கு உரியதாகவும் அமைந்துள்ளது. தன் தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளை துாண்டி, வெறுப்பு பேச்சின் வாயிலாக, தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியை தவிர்க்க பார்க்கிறார் மோடி.
வெறுப்பும், பாகுபாடும்தான் பிரதமர் மோடியின் அசலான உத்தரவாதங்கள். அவரது இத்தகைய அப்பட்டமான வெறுப்புணர்வை துாண்டும் பேச்சை, தேர்தல் கமிஷன் காதில் வாங்காதது போல் இருக்கிறது. தேர்தல் கமிஷன், நடுநிலைமை என்பதன் சுவடே இன்றி, அப்பண்பையே கைவிட்டுள்ளது.
இண்டியா கூட்டணி வாக்குறுதி அளித்துள்ள சமூக, பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது, சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்கான வழிமுறையாக, நெடுநாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
அதற்கு தவறான பொருள் கற்பித்து, பின்தங்கிய வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம் ஆகியவற்றில் உரிய பங்கு கிடைக்கவிடாமல் செய்கிறார் பிரதமர் மோடி.
இண்டியா கூட்டணி தலைவர்கள், பா.ஜ.,வின் வஞ்சகமான திசை திருப்பும் தந்திரங்களை பற்றி கவனமாக இருக்க வேண்டும்.
பிரதமர் மோடியின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்தும் நம் முயற்சிகளை மேலும் உறுதியுடன் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

