வாக்காளர் பட்டியலில் குளறுபடி; 'பூத் சிலிப்' வழங்க திணறல்
வாக்காளர் பட்டியலில் குளறுபடி; 'பூத் சிலிப்' வழங்க திணறல்
ADDED : ஏப் 08, 2024 06:15 AM

சென்னை : வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களால் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்களுக்கு 'பூத் சிலிப்' வழங்க திணறி வருகின்றனர்.
தமிழகத்தில் 3.06 கோடி ஆண்கள்; 3.17 கோடி பெண்கள்; 8,467 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஏப்., 19ல் ஓட்டளிக்க வசதியாக, தேர்தல் கமிஷன் சார்பில், அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கப்படுகிறது.
முக்கிய காரணம்
ஏப்., 1 முதல், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். பூத் சிலிப்பில் வாக்காளர் பெயர், பாலினம், வாக்காளர் அடையாள அட்டை எண், தந்தை பெயர், பாகம் எண், பாகத்தின் பெயர், வரிசை எண், ஓட்டுச்சாவடி பெயர், முகவரி போன்ற விபரங்கள் உள்ளன.
இதை ஓட்டளிக்க ஆவணமாக பயன்படுத்த முடியாது; அதேநேரம் ஓட்டளிக்கச் செல்லும் போது, அதில் உள்ள வரிசை எண், பாகம் எண் போன்ற விபரங்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர் விபரத்தை சரி பார்க்க எளிதாக இருக்கும்.
பூத் சிலிப் வழங்கும் பணியை வரும் 13ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வாக்காளர் பட்டியலில் பல இடங்களில், கணவன் பெயர் ஒரு இடத்திலும், மனைவி பெயர் ஒரு இடத்திலும் உள்ளன. வீட்டு எண் மாறி உள்ளது.
இதனால், வாக்காளர் பட்டியலில், வாக்காளர் பெயரை தேடி பிடிப்பது சிரமமாக உள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில், அடுத்த வீட்டில் உள்ள நபர்கள் யாரென்றே தெரிவதில்லை. இதனால், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர் விபரத்தை அறிவதும் சிரமமாக உள்ளது. இதுவே, முழுமையாக பூத் சிலிப், வாக்காளர்களை சென்றடையாததற்கு முக்கிய காரணம்.
இது குறித்து, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சிலர் கூறியதாவது: ஒவ்வொரு தேர்தலிலும், வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்களை, மேலதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம்.
சிரமம்
அவர்கள் அதை சரி செய்யாமல், ஒவ்வொரு முறையும் ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியலை அப்படியே அச்சிட்டு வழங்கி விடுகின்றனர். ஓட்டுச்சாவடி அலுவலர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றனர்.
எனவே, வாக்காளர் பெயரை, வாக்காளர் பட்டியலில் கண்டுபிடித்து வழங்குவது சிரமமாக உள்ளது. பொதுவாக ஒரு தெருவில் உள்ளவர்கள், அந்த தெருவில் வசிப்பவர்கள் குறித்த விபரங்களை தெரிவித்தால், எளிதாக கண்டுபிடிக்கிறோம்; இல்லையெனில் கடும் சிரமமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

