ரூ.1100 கோடி ஜி.எஸ்.டி., செலுத்த நோட்டீஸ்; நடவடிக்கையை எதிர்த்து மின்வாரியம் வழக்கு
ரூ.1100 கோடி ஜி.எஸ்.டி., செலுத்த நோட்டீஸ்; நடவடிக்கையை எதிர்த்து மின்வாரியம் வழக்கு
ADDED : பிப் 22, 2025 02:49 AM

சென்னை : மின் வினியோகம் செய்ததற்காக, 2017 முதல் 2021 வரை, 1,100 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., செலுத்துமாறு மின் தொடரமைப்பு கழகத்திற்கு அனுப்பிய நோட்டீஸ் மீதான விசாரணை நடவடிக்கையை, சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் தொடரமைப்பு கழகம், ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரியாக, 2017 முதல் 2021ம் ஆண்டு வரையிலான நான்கு நிதியாண்டுகளுக்கு, 1,100 கோடி ரூபாய் செலுத்தும்படி, ஜி.எஸ்.டி., துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து, தமிழக மின் தொடரமைப்பு கழகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக மின் தொடரமைப்பு கழகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''ஜி.எஸ்.டி., முறை அமலுக்கு வரும் முன், மின் தொடரமைப்பு கழகத்துக்கு சேவை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதனால், ஜி.எஸ்.டி., விதிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது சட்டவிரோதம்,'' என்றார்.
அதை ஏற்ற நீதிபதி, ஜி.எஸ்.டி., வசூல் தொடர்பான நடவடிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்; விசாரணையை ஏப்ரல், 7க்கு தள்ளிவைத்தார்.