'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் மின்வாரியம் மீண்டும் 'டெண்டர்'
'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம் மின்வாரியம் மீண்டும் 'டெண்டர்'
ADDED : மார் 12, 2025 11:53 PM
சென்னை:தமிழகத்தில், 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் திட்டத்திற்கு, மின்வாரியம் மீண்டும் 'டெண்டர்' கோரியுள்ளது.
தமிழகத்தில் வீடு உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின்வாரியமே மேற்கொள்கிறது. மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டு உள்ளன.
மின்வாரிய ஊழியர்கள், இரு மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு சென்று, மீட்டரில் பதிவாகியுள்ள மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர்.
சிலர் தாமதமாக கணக்கு எடுப்பது, மின் பயன்பாட்டை குறைத்து கணக்கு எடுப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால், மின்வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதைத் தடுக்க, ஆளில்லாமல் தானாகவே கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை செயல்படுத்த, மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, 3.03 கோடி மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, அதை பத்து ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 2023 ஆகஸ்டில் 'டெண்டர்' கோரப்பட்டது.
இதில், அதானி குழும நிறுவனம் உட்பட நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. மூன்று கட்ட பேச்சு நடத்தியும் விலை குறைப்பு நடவடிக்கையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், அந்த டெண்டர், சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்ய, மின்வாரிய இயக்குநர்கள் குழு, கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.
தற்போது, ஆறு தொகுப்புகளாக, 3 கோடி மின் இணைப்புகள், 4.94 லட்சம் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்கள் என, மொத்தம், 3.04 கோடி இணைப்புகளில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தி, அதை, 93 மாதங்களுக்கு பராமரிக்கும் பணிக்கு, மின் வாரியம் மீண்டும் டெண்டர் கோரியுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த டெண்டரை ஆறு மாதங்களுக்குள் இறுதி செய்து, தகுதியான நிறுவனம் வாயிலாக திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வாகும் நிறுவனம் மீட்டர் பொருத்துவது, மென்பொருள் உருவாக்கம், தகவல் தொடர்பு வசதி, ஒருங்கிணைப்பது என, அனைத்து பணிகளையும், 93 மாதங்களுக்கு மேற்கொள்ள வேண்டும். திட்ட செலவு, 20,000 கோடி ரூபாய்.
இவ்வாறு அவர் கூறினார்.