ADDED : ஆக 28, 2024 05:19 AM

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக செயலர் தமிழ்மதி, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ள மனு:
எங்கள் கட்சிக் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும், யானையை பயன்படுத்தி வருகிறோம். நீலக்கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளம். அம்பேத்கர் தேர்வு செய்து, தேர்தலில் போட்டியிட்ட சின்னம். யானை சின்னத்துக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வுப்பூர்வமான வரலாற்று உறவு உள்ளது.
தமிழகத்தில் புதிதாக கட்சி துவக்கி உள்ள நடிகர் விஜய் தன் கொடியை அறிமுகம் செய்துள்ளார். அதில், எங்கள் கட்சியின் சின்னமான யானை உருவம் இடம் பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எந்த பதிலும், நடவடிக்கையும் எடுக்காமல் விஜய் உள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி சின்னத்தை பயன்படுத்தியுள்ள விஜய் மீது நடவடிக்கை எடுத்து, அவர் கொடியில் யானை உருவத்தை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'விஜய் தன் கட்சி கொடியில் உள்ள யானை உருவத்தை அகற்றாவிட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்' என, பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்னொரு சிக்கல்
இதற்கிடையில், 'விஜய் கட்சியின் கொடி, திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பதிவு செய்யப்பட்ட எங்கள் இயக்கமான வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் கொடி போலவே இருக்கிறது.
அதனால், விஜய் தன் கட்சிக் கொடியை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல், வழக்குத் தொடர்ந்து உரிமையை நிலை நிறுத்துவேன்' என, அக்கழகத்தின் மாநிலத் தலைவர் அண்ணா சரவணன் அறிவித்திருக்கிறார்.