விநாயகர் சதுர்த்தி நாளில் வேலைவாய்ப்பு முகாமா? ஹிந்து முன்னணி கண்டனம்
விநாயகர் சதுர்த்தி நாளில் வேலைவாய்ப்பு முகாமா? ஹிந்து முன்னணி கண்டனம்
ADDED : செப் 07, 2024 06:55 AM
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி நாளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது, ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயல் என, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் விடுமுறை வழங்குகிறது. இதையொட்டி மக்கள் நலனுக்காக தமிழகத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவில்களில் சென்று வழிபாடு செய்யும் விதமாகவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த நாளில், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நாளில் ஹிந்துக்கள் நடத்தும் வழிபாடுகளை தடுக்கும் எண்ணத்தில் இது நடப்பதாகவே கருதுகிறோம். பண்டிகை நாளில் இப்படி ஏற்பாடு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. ஓட்டு வங்கி அரசியலுக்காகவும், ஹிந்து மதத்தினரை வஞ்சிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடனேயே இதை செய்துள்ளதை கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.