ADDED : ஜூன் 12, 2024 01:06 AM

சென்னை:ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை என்ற திட்டம், எந்த அளவுக்கு சாத்தியமாகும்; மாணவர்களுக்கும், பல்கலைகளுக்கும் பயன் அளிக்குமா என்பது குறித்து, ஆய்வு செய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:
மத்திய அரசின் பல்கலை மானியக்குழுவின், ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை என்ற திட்டம் வரவேற்கப்படக் கூடியது. வெளிநாடுகளில் ஆண்டுக்கு, 2 முறை மாணவர் சேர்க்கை திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அங்கேயும், வழக்கமான கல்வி ஆண்டு காலத்தில்தான், 90 சதவீதம் மாணவர்கள் பட்டப் படிப்புகளில் சேர்கின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை, இந்த திட்டத்தை ஒரே நேரத்தில், எல்லா நிலைகளிலும், அமல்படுத்த வேண்டாம். பிஎச்.டி.,க்கு ஆண்டுக்கு இரு முறை சேர்க்கை நடத்தலாம்; அது குறிப்பிட்ட கால அளவில் முடிக்கும் படிப்பு என்பதால், சேர்க்கை காலம் பிரச்னையில்லை.
முதுநிலை படிப்பில் கடைசி செமஸ்டர் காலத்தில், மாணவர்கள் செயல்முறை திட்டங்களில் கவனம் செலுத்துவதால், அந்த கால கட்டத்தில் புதிய மாணவர்களை சேர்த்து பாடம் நடத்த, பேராசிரியர்களுக்கும் தேவையான கால அவகாசம் கிடைக்கும். எனவே, முதுநிலை படிப்புக்கு, ஆண்டுக்கு இருமுறை சேர்க்கையை, சில பல்கலைகளில் சோதனை முறையில் அமல்படுத்த வேண்டும்.
இதில், எந்த விதமான பிரச்னைகள், சவால்கள் உள்ளன என்பதை தெரிந்து, அதை சரி செய்தப்பின், இளநிலை படிப்புக்கு, இருமுறை சேர்க்கை திட்டம் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்.
ஏனென்றால், இளநிலை படிப்பில் அதிக மாணவர்கள் சேர்வர்; ஆண்டின் இரண்டாம் முறையில் சேரும் மாணவர்களுக்கு, தேவையான பேராசிரியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும். வகுப்பறைகள், ஆய்வகங்கள் என, கூடுதல் வசதிகளும் தேவை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, இருமுறை சேர்க்கை திட்டத்தை, தகுந்த ஆய்வுகள் அடிப்படையில் நடைமுறைப்படுத்தினால், மாணவர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

