இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி வரும் 28ல் சென்னையில் நடக்கிறது
இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி வரும் 28ல் சென்னையில் நடக்கிறது
ADDED : ஜூலை 24, 2024 12:41 AM
சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, 'தினமலர்' நாளிதழ் சார்பில், வரும் 28ம் தேதி, குன்றத்துாரில் உள்ள, 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' கல்லுாரி வளாகம் மற்றும் சென்னை அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., ஸ்கூல் அண்டு ஜூனியர் கல்லுாரியில் நடக்கிறது.
அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும், 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பி.இ., - பி.டெக்., படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் கவுன்சிலிங்கில் சிறப்பு பிரிவினருக்கான ஒதுக்கீடு நேற்று முன்தினம் துவங்கியது. வரும், 29ல் பொது கவுன்சிலிங் துவங்க உள்ளது.
இந்த கவுன்சிலிங்கில் விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து, விரிவான விளக்கம் அளிக்கும் வகையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, 'தினமலர்' நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்தாண்டுக்கான நிகழ்ச்சி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியுடன் இணைந்து, சென்னையில் இரண்டு இடங்களில், 28ம் தேதி நடக்கிறது.
அன்று காலை 10:00 முதல், மதியம் 1:00 மணி வரை, குன்றத்துாரில் உள்ள சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி வளாகத்திலும், பிற்பகல் 3:00 முதல், மாலை 6:00 மணி வரை, அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ., ஸ்கூல் அண்டு ஜூனியர் கல்லுாரியிலும் நடக்கிறது.
தமிழக இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை முன்னாள் செயலர் மற்றும் கோவை கே.பி.ஆர். இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் பி.நாராயணசாமி பங்கேற்று, இன்ஜினியரிங் நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கம் அளிக்க உள்ளார்.
வேலைவாய்ப்புகள் மிகுந்த பாடப்பிரிவுகள் குறித்து, கல்வி ஆலோசகர் ஆர்.அஸ்வின் ஆலோசனை வழங்க உள்ளார்.
இந்தாண்டு எந்த படிப்புக்கு மவுசு அதிகம், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது எப்படி, எந்த பாடப்பிரிவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்பது போன்ற விபரங்களை, கல்வி ஆலோசகர்களிடம், மாணவர்கள் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

