ஒரு முட்டுச்சந்தை கூட தி.மு.க.,வால் காப்பாற்ற முடியாது: அண்ணாமலை
ஒரு முட்டுச்சந்தை கூட தி.மு.க.,வால் காப்பாற்ற முடியாது: அண்ணாமலை
ADDED : ஏப் 10, 2024 11:59 PM
சென்னை:'வெறும், 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க.,வால், இந்தியாவை அல்ல, தமிழகத்தில் ஒரு முட்டுச்சந்தை கூட காப்பாற்ற முடியாது; பொய்யான தகவலை தெரிவிக்க, ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பிரதமர் மோடி தான் மூன்றாவது முறையாக பிரதமாக பொறுப்பேற்க இருக்கிறார் என்ற உண்மையை, தன்னை அறியாமல் வெளிப்படுத்தி இருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.
வெறும், 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க.,வால், இந்தியாவை அல்ல, தமிழகத்தில் ஒரு முட்டுச்சந்தை கூட காப்பாற்ற முடியாது என்ற உண்மை, முதல்வருக்கு தெரியாமலா இருக்கும்?
மகனும் மருமகனும் சேர்ந்து, 30,000 கோடி ரூபாய் ஊழல், மணல் கொள்ளை, மாநிலம் முழுதும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, கனிம வள கொள்ளை, கஞ்சா, போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, சிறைக்கு செல்ல காத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., அமைச்சர்கள், நிர்வாகிகள் என, இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்திலும் தங்கள் குடும்பத்தினர் பெயரை, 'ஸ்டிக்கர்' ஒட்டிக் கொள்கிறார் ஸ்டாலின்.
கடந்த 2021 தேர்தலின் போது, தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளும், மத்திய அரசிடம் நிறைவேற்ற கோரியிருப்பதும் தான், இந்த நீளமான துண்டு சீட்டில் இருக்கிறது என்பது கூட தெரியாமல், அதை அப்படியே வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தி.மு.க.,வும், காங்கிரசும் கச்சத்தீவை தாரைவார்த்ததன் விளைவு, நம் மீனவர்கள் இத்தனை ஆண்டுகளாக பாதிக்கப்படுகின்றனர்.
அனைத்து மாநிலங்களும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்க, போலி சமூக நீதி நாடகமாடி கொண்டிருக்கிறது தி.மு.க.,
சொந்த தொகுதியை விட்டு தனித்தொகுதி என்பதற்காக, '2ஜி' ராஜாவை, நீலகிரிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. மலை கிராமங்களுக்கு சாலை வசதியை கூட அமைத்து கொடுக்காமல், வெட்கமே இல்லாமல் சமூக நீதி பற்றி பேசுவதெல்லாம் தேவையா ஸ்டாலின்?
கடந்த, 2021 தேர்தலின் போது, 511 வாக்குறுதிகள் கொடுத்த தி.மு.க., அவற்றில் எத்தனை நிறைவேற்றியிருக்கிறது என்பதை மக்கள் மத்தியில் கூற தைரியம் இருக்கிறதா?
முதல்வர் பதவிக்கு சற்றும் பொறுப்பில்லாமல், பொது மக்களை அச்சுறுத்தும் வண்ணம் பொய்யான தகவல்களை தெரிவிக்க ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்.
யார் எதை எழுதி கொடுத்தாலும், அதை அப்படியே படிப்பது உங்கள் வழக்கமாக இருக்கலாம்.
ஆனால், நீங்கள் வகிக்கும் முதல்வர் பதவிக்கு அது அழகில்லை ஸ்டாலின்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

